என் மலர்tooltip icon

    உலகம்

    • தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அமைந்துள்ளது அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி.

    இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வரும் நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    • அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
    • 20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.

     காசாவில் நேற்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.

    அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர், அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

    மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.

    மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

    முன்னதாக புதன்கிழமை அன்று மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டிரம்ப் உடைய 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதில் ஹமாஸ் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற  வேண்டும்.

    பதிலுக்கு, இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்து, காசாவில் ஒரு அமைதி காக்கும் படை அவர்களை மாற்றிய பிறகு படிப்படியாக தனது படைகளை வாபஸ் பெறும்.

    இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் கலந்தாலோசித்து வரும் நிலையில் நேற்றைய தாக்குதல் பின்னடைவாக அமைந்துள்ளது. 

    • மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார்

    டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். '

    அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று முன்தினம் மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டாலராக சற்று இறக்கம் கண்டது.

    இதனால் அவர் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலும், மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு ரூ.44.33 லட்சம் கோடியாகும். இதே வேகத்தில் அவரது சொத்து மதிப்புகள் உயர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தனிநபரின் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் உலகின் முதல் டிரில்லியனராக அவர் இடம் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
    • சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்திய மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தி வருகிறார்.

    இந்நிலையில் கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பாஜகவை கொந்தளிக்க செய்துள்ளது.

    நேற்று அங்கு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா உலகிற்கு வழங்க நிறைய இருக்கிறது. அதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் தற்போது இந்தியாவின் கட்டமைப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா கவனிக்க வேண்டிய சில அச்சுறுத்தல்கள் உள்ளன.

     ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

    இந்தியா பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகளைக் கொண்டது. ஜனநாயக அமைப்பே அனைவருக்கும் இடமளிக்கிறது. ஆனால், இப்போது ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

    சீனா மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா பரவலாக்கப்பட்ட, பல மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட சிக்கலான அமைப்பைக் கொண்டது. சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது. நமது நாட்டின் அமைப்பு இதை ஏற்றுக்கொள்ளாது" என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் கருத்துக்கு எக்ஸ் மூலம் விமர்சித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை பிரச்சாரத் தலைவர் போல வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தைத் தாக்குகிறார். அவர் இந்திய தேசத்துடன் சண்டையிட விரும்புகிறார்" என்று குற்றம் சாட்டினார். 

    • 4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.
    • ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக, அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தருகிறார்.

    4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் முத்தாகி அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

    ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    சமீபத்தில் முத்தகியின் சில பயணங்களுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முறை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
    • அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது.

    ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை அதிபர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ரஷியாவின் சோச்சி (Sochi) நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் மன்ற (Valdai Forum) நிகழ்வில் அந்நாட்டு அதிபர் புதின் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். 

    தலைகுனிவை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்

    அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவில் இருந்து எண்ணை இறக்குமதியால் சமப்படுத்தப்படும்.

    இந்தியா இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும்.

    ரஷியாவின் வர்த்தக பங்காளிகளுக்கு அதிகவரிகள் விதிக்கப்படுவது உலகளாவிய விலைகளை உயர்த்தும். இத்தகைய நடவடிக்ககைள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

    மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும் நேர்மையான பொருளாதார வளரர்ச்சியை தக்க வைத்து கொள்வதே ரஷியாவின் நோக்கமாகும்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். 

    மேலும் அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷிய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாக புதின் சுட்டிக் காட்டினார்.

    2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம் எனவும் புதின் தெரிவித்தார்.

    "அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்." என்று புதின் மேலும் கூறினார். 

    ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த கருத்து வந்துள்ளது.    

    • மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்தது.
    • இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.

    எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

    புதன்கிழமை, மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாகவும், ஓரங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.   

    • யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
    • டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

    அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

    • எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
    • இதனால் 11000 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம்.

    இந்நிலையில் மிட்செல் டீக்கின் (25) என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.

    இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

    இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
    • இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

    நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.

    இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.

    விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
    • இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.

    இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

    மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.

    இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.

    குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது. 

    • இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது.
    • சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது.

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-வது கூட்டம் ஜெனிவா நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டத்தில் இந்திய தூதர் முகமது ஹூசைன் பேசியதாவது:-

    சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது. இதை இந்தியா மிகவும் முரண்பாடாக கருதுகிறது. பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்வியை புறக்கணித்து சர்வதேச மன்றங்களை பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×