என் மலர்
உலகம்
- ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
- இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.
எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.
இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.
இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
- அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டப்ளின்:
அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.
இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
- டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
- பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.
வாஷிங்டன்:
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டினார்கள். வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும்.
நாம் வாழும் பூமி எனப்படும் கோளானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
மேலும், இந்த கோளானது வளி மண்டலத்தில் தூசு மற்றும் மற்ற பொருட்களின் மோதல்கள் காரணமாகவோ அல்லது அந்த பொருட்கள் ஒன்றாக இணைவதன் மூலமாகவோ உருவாகவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வருகிறது. இப்படி அனைத்து பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருகிறது. இந்த கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் ஆகியவற்றை இதுவரை பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை தனக்குள் சேர்த்து வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கருதினார்கள்.
ஆனால் விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த 'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோளின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பலுசிஸ்த்தான் பிரதேசத்தின் கனிம மாதிரிகளை டிரம்ப்பிடம் காட்டிய புகைப்படங்கள் வைரலானது.
- உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பயன்படும்.
அரபிக் கடலில் ஒரு புதிய துறைமுகத்தைக் கட்டவும் வர்த்தக திட்டங்களை செயல்படுத்தவும் பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.
அண்மையில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஐ சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் அவருக்கு தங்கள் நாட்டின் அங்கமான பலுசிஸ்த்தான் பிரதேசத்தின் கனிம மாதிரிகளை காட்டிய புகைப்படங்கள் வைரலானது. மேலும் அந்தச் சந்திப்பில், ஷெரீப் அமெரிக்க நிறுவனங்களிடம் வேளாண்மை, தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்யக் கோரியிருந்தனர்.
இந்நிலையில் பலுசிஸ்தான் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பாஸ்னி நகரில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தத் துறைமுகத்தைக் கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது வர்த்தக நோக்கங்ககுக்காக மட்டுமே என்றும் இந்த துறைமுகம் அமெரிக்க ராணுவ தளமாக இருக்காது என்றும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் நடைமுறை சாத்தியம் கேள்விக்குறியாகவே உள்ளது.
- குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதாகும்.
- ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது
அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் பல டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தன.
இந்நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு பாஸ்டனில் உள்ள ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது
குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதாகும்.
ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது என கூறி கீழமை நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்தது.
அமெரிக்க சட்டம், 14வது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார்.
- எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106-வது ஆவார்.
இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது.
11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.
இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
- காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
- மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்று, இஸ்ரலிய பணய கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக வர்ணித்தன.
பிணைக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
இது ஒரு முக்கியமான முன்னேற்றப் படி என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.
ஹமாஸின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்
நிரந்தர போர் நிறுத்தம் உடனடியாக நிறுவப்பட வேண்டும், அனைத்து பணயக்கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
- ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
- அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று இஸ்ரேல் இந்த அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹாமாஸ் ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.
அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அவரின் சொந்த சமூக வலைதள பதவில், ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.
இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்!
இப்போது, தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.
- இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.
- இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இஸ்ரேலில் ஓட்டமன் சாம்ராஜ்யத்தியில் இருந்து விடுதலை கிடைத்த ஹைஃபா போரின் 107 ஆவது நினைவு நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "1918-ல் ஹைஃபாவை விடுவித்த ஜோத்பூர், மைசூர் மற்றும் முன்னாள் ஹைதராபாத் பகுதிகளைச் சேர்ந்த இந்திய குதிரைப் படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய இந்திய தூதர் ஜே.பி. சிங், "முதலாம் உலகப் போர் காலத்தில் 74,000-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் இஸ்ரேலில் ஐ.நா. அமைதி படைகளில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
- இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.
பெர்லின்:
டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






