என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
    • இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை.

    கவுகாத்தி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.

    இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். ஆனால் சமாரி அட்டப்பட்டு தான் இலங்கையின் ஆணி வேர். அவர் ஜொலிப்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-

    இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.

    இலங்கை: சமாரி அட்டப்பட்டு (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்னே, அச்சினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, மால்கி மதரா, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீரா, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்கா.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம்.
    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-14 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி பிற்பகல் 2.52 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    இன்று துர்காஷ்டமி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுர மர்த்தினி அலங்கார காட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் சிம்மவாகினி அலங்காரம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ எம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை, முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுநதருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆைச

    மிதுனம்-அமைதி

    கடகம்-பரிசு

    சிம்மம்-புகழ்

    கன்னி-சாதனை

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- நன்மை

    மகரம்-மேன்மை

    கும்பம்-களிப்பு

    மீனம்-கவனம்

    • கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    • போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.

    போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.

    இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுக்கிறது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

    இந்த விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மேலும் பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. இந்த விழாவின் போது மோகன்லால் கேரள அரசால் முறையே கௌரவிக்கப்படுவார்.   

    • வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அலுவலகத்தை தாக்கியது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நேதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொலைபேசியில் அழைத்து நேதன்யாகு மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    மேலும் வருங்காலங்களில் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளது. இந்த போன் காலில் டிரம்ப்பும் உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

     இந்த மாதம் 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.  

    • அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?
    • திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வதந்தி பரப்புபவர்களை கண்காணித்து தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில பாஜக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,

    "பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு!. கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதைவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பது தான் திராவிட மாடலா? அசாதாரண நிலையின்போது அதற்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களைத் திசைதிருப்புவதற்கு, உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா? இப்படி அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?

    தன்னால் நிகழ்ந்த தவறைத் திரையிட்டு மறைக்க தன்னைக் கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்க்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்.

    சிபிஐ விசாரணை கோரி, உண்மையைக் கண்டறிந்து, இறப்புக்கான நீதியைப் பெற்றுத் தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இதனை (அறிவாலயம்) அரசு உணர வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.   

    • வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.

    காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

    அவர் கூறியதாவது, காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி.

    ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும்.

    காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் வாஷிங்டன் மிக மிக அருகில் வந்துவிட்டது. அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    20 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    ஒப்பந்தம் ஏற்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து பல கட்டங்களாக படிப்பிடியாக வெளியேரும்.

    மேலும் அங்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்காலிக சர்வதேச படை நிலைநிறுத்தப்படும்.

    டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.

    ஹமாஸ் போராளிகள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

    பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக காசாவை மீட்ருவாக்கம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 

    முன்னதாக, நேதன்யாகு ஐ.நா.வில் பேசியபோது, ஹமாஸுக்கு எதிராக தொடங்கிய வேலையை முடிப்போம் என்று அடித்துகூறினார். மேலும், பாலஸ்தீனம் என்ற ஒரு தேசம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    • கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

    முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகருமான சஞ்சீவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்" என விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    • கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
    • இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.

    இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

    அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

    முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
    • பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

    இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

    அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.

    பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று வன்முறையை தூண்டும் வகையில் தெரிவித்திருந்தார்.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அதை நீக்கியும் உள்ளார். 

    ×