என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
    • சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.

    "சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.

    எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.

    சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.

    சித்திதாத்ரி தேவி கதை:

    பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.

    அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.

    புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.

    மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

    சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.

    சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.

    • வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
    • தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.

    நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஒன்பதாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி..!!

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

    ரிஷபம்

    ஆலய வழிபாட்டில் அமைதி காண வேண்டிய நாள். வருமானப்பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    மிதுனம்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் திடீரென எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம்.

    கடகம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    சிம்மம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம்.

    துலாம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    தொழில் வளர்ச்சிக்கு துர்க்கையை வழிபட வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள்.

    தனுசு

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

    மகரம்

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.

    மீனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    • சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
    • மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
    • அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும்.

    சென்னை:

    மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் தற்போது 890 டன் அளவு தங்கம் கையிருப்பு இருக்கிறது. அதேபோல இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.

    அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும். உலகிலேயே அதிக மக்கள் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எது என்றால் அது இந்தியாதான். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிஇ-360 என்ற சர்வேயில் இந்தியாவில் 87 சதவீத வீடுகளில் தங்கம் இருக்கிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த சமயத்தில் ஒரு வீட்டில் 10 கிராமம் 22 காரட் தங்கம் இருந்திருந்தால், அதன் அன்றைய மதிப்பு வெறும் ரூ.28 ஆயிரத்து 560 தான். ஆனால் இன்றைய அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 700 ஆகும்.

    இதுகுறித்து தங்க கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்தியாவில் 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 62 சதவீத குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர குடும்பங்கள். அதாவது ஏழைகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். எனவே இவர்களது வீடுகளில் குறைந்தது ஒரு பவுன் தங்கம் என்ற அளவிலாவது இருக்கும்.

    அந்த அடிப்படையில் இந்த 62 சதவீத குடும்பங்களும் லட்சாதிபதி என்ற நிலையை எட்டி உள்ளனர். அதேபோல் 125 பவுன், அதாவது 1,000 கிராம் தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள் எல்லாம் இப்போது கோடீஸ்வர குடும்பங்களாக உயர்ந்துள்ளனர். மேலும் ஏழை குடும்பங்களில் காதில் போட்டிருக்கும் கம்மல், தோடு என்ற சிறிய தங்க நகை ஆபரணமாக இருந்தாலும், அவர்களுக்கு அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகள் ஆகவும், லட்சாதிபதிகளை கோடீசுவரர்களாகவும் மாற்றி இருக்கிறது என்றனர்.

    தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல. அது இந்திய குடும்பங்களின் உறுதியான நம்பிக்கை, மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு ஆகும். எனவே எவ்வளவு விலை தங்கம் வந்தாலும், நமது கலாசார நிகழ்வுகளுடன் அது தொடர்பில் இருப்பதால் விற்பனை குறையாது என்பது மட்டும் உறுதி.

    • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
    • இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை.

    கவுகாத்தி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.

    இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். ஆனால் சமாரி அட்டப்பட்டு தான் இலங்கையின் ஆணி வேர். அவர் ஜொலிப்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-

    இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.

    இலங்கை: சமாரி அட்டப்பட்டு (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்னே, அச்சினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, மால்கி மதரா, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீரா, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்கா.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம்.
    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-14 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி பிற்பகல் 2.52 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    இன்று துர்காஷ்டமி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுர மர்த்தினி அலங்கார காட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் சிம்மவாகினி அலங்காரம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ எம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை, முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுநதருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆைச

    மிதுனம்-அமைதி

    கடகம்-பரிசு

    சிம்மம்-புகழ்

    கன்னி-சாதனை

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- நன்மை

    மகரம்-மேன்மை

    கும்பம்-களிப்பு

    மீனம்-கவனம்

    • கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    • போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.

    போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.

    இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுக்கிறது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

    இந்த விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மேலும் பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. இந்த விழாவின் போது மோகன்லால் கேரள அரசால் முறையே கௌரவிக்கப்படுவார்.   

    ×