என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார்.
- 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் அம்மனாக நடித்து இருக்கும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது.
- இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 கல்வியால் நிறுவப்பட்ட மதிப்புமிக்க உலகின் சிறந்த பள்ளி பரிசுகள் 2025-ல் சமூக தேர்வு விருதைப் பெற்றுள்ளது. இந்த பள்ளி பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளை தாண்டி இந்த விருதை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் மூடப்படும் நிலையில் இருந்த இந்த பள்ளி அதன் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. இந்த ஆண்டு T4 கல்வியால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஒரே அரசு மராத்தி-நடுத்தர பள்ளி இதுவாகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது. மாநில விதிமுறைகளின்படி, 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பொதுவாக மூடப்படுகின்றன.
இருப்பினும், உள்ளூர் சமூகத்தின் கூட்டு மற்றும் தொலைநோக்கு முயற்சிகள் மூலம், தப்பிப்பிழைத்தது மட்டுமல்லாமல் செழித்து வளர்ந்தது. இன்று இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
விருது பெற்ற இந்த பள்ளியை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பாராட்டி உள்ளார். இந்த சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம். மேலும், ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி ஏற்றுக்கொண்ட 'மாணவர்கள்-கற்பித்தல்-மாணவர்கள்' மாதிரி புரட்சிகரமானது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து பள்ளியின் முதல்வர் தத்தாத்ரே வேர் கூறுகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளி அங்கீகாரம் பெற்றது. அவர்கள் புதிய உயரங்களை அடைய எங்களுக்கு உதவினர். எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது. மேலும் நேர்மையான, தன்னலமற்ற வேலையிலிருந்து மட்டுமே நம்பிக்கை வருகிறது என்று அவர் கூறினார்.
- வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
- திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 2 வேலையும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ரத உற்சவத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகன சேவை நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை மேள வாத்தியங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் கோவில் அருகே உள்ள புஷ்கரணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.
திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர். 26,738 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 2.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- த.வெ.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு 'ஒய்', 'இசட்' எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 269 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கை குலுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப்போட்டியின் போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கை குலுக்குதல் அல்லது வீராங்கனைனகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான போட்டிகளின் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- மாத தொடக்க நாளான நேற்று ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.
- இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மாத இறுதி நாளான நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான நேற்று காலை, மாலை என இருவேளையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
30-09-2025- ஒரு கிராம் ரூ.161
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
- நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன்.
- சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சோயாபீன்சை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. அமெரிக்காவை பொறுத்தவரை சீனாவின் சோயாபீன்சுகளை வாங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
சீனா சோயாபீன்ஸ் ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டிரம்ப் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயாபீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து விவசாயிகளுக்கு உதவுவோம். நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன்.
சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.
- சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது.
சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஏர்கிராஸ் மாடல் பாதுகாப்பு சோதனைகளில் அசத்தியுள்ளது. பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் (பாரத் NCAP) C3 ஏர்கிராஸ் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த SUV பயணிகள் பாதுகாப்பில் (AOP) 27.05/32 மதிப்பெண்களைப் பெற்று, முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் (COP) ஏர்கிராஸ் 40/49 புள்ளிகளைப் பெற்று, நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.
சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், எலெட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மாணிட்டர் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு உபகரணங்களுடன் வருகிறது.
சமீபத்தில், சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இது வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய மாடல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் X மற்றும் C3 X போன்ற அப்டேட்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிசி, மோகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது.
- விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நேற்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. அக்டோபர் 2-ந்தேதியான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெறும்.
இன்று கல்வி, கலைகள், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் சரஸ்வதி தேவியின் அருளால் தொழில்கள் சிறப்படையும், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும், தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் வழிபாடு நடந்தது. நெல்மணியில் 'அ' என எழுத வைத்து குழந்தைகளுக்கு கற்றலை பெற்றோர் தொடங்கி வைத்தனர்.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.






