search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saraswati puja"

    ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், வாணியம்மைபாடி ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கு ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘வாக்கு’ என்னும் கல்விக்கு அதிபதி என்ற கர்வம் சரஸ்வதியிடம் காணப்பட்டது. இதனால் பேசும் சக்தியை இழக்கும்படி சரஸ்வதிக்கு பிரம்மன் சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி, பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திருமறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவமிருந்தாள். பின்னர் அத்தல அம்பாளிடம் யாழ் இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தன் யாழில் இருந்து வெளிப்பட்ட இசையை விட இனிமையாக இருப்பதைக் கண்டு, யாழை மூடிவைத்து விட்டாள். இதனால் தான் வேதாரண்யத்தில் உள்ள இறைவியின் பெயர் ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்றானது.

    தன்னைப் பிரிந்து சென்ற சரஸ்வதியைத் தேடி பூலோகம் வந்தார் பிரம்மன். தவத்தில் இருந்த சரஸ்வதியை சமாதானம் செய்து, வாணியம்பாடி தலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் வழிபட்டதன் பயனாக சரஸ்வதிக்கு பேசும் சக்தி வந்தது. மேலும் அங்குள்ள ஹயக்ரீவன் முன்னிலையில் யாழை மீண்டும் சரஸ்வதி இசைக்க இறைவனும், இறைவியும் அருள்புரிந்தனர். இதையடுத்து சரஸ்வதி இனிய கீதம் இசைத்தாள்.

    சரஸ்வதிக்கு வாணி என்ற பெயரும் உண்டு. வாணி பாடிய தலம் என்பதால், அது ‘வாணியம்மைபாடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘வாணியம்பாடி’ ஆனது.



    சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது நம்பிக்கை. ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.
    ×