என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
தி.மு.க. முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப் பிய கேள்விகளுக்குத் தேர் தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்க வில்லை.
ஆட்சிகளை மாற்றி அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.
பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகா ரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பா வையாக மாறின.
இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தி ருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன் னரே பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி விட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப் பட்டது.
பீகாரில் பல லட்சக்க ணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதி லிருந்து சில லட்சக்க ணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வில்லை.
ஜனநாயகத்தின் ஆணிவே ரான தேர்தலை நேர்மை யோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
பீகாரில் கடைப்பிடிக் கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படா மலேயே நமது வாக்கா ளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்க வும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மியான்மரின் சாங் யூ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
- போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
- வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது.
- அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் கூறியிருப்பதாவது:-
வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சவரன் தங்கம் விலை காலையில் ரூ.800 உயர்ந்தது.
- தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாஹல், தனஸ்ரீ தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
- சாஹல், தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2 ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறி செல்கிறேன். நான் மீண்டும் இதை பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.
- பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். அந்நிறுவனம் தயாரிக்கும் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவே இருக்காது என்பதால் அப்படம் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தற்போது, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்திற்கான பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரமாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் திரைத்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அதாவது, வேல்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி உள்ளது. மற்ற அனைத்து பெரிய இசை லேபிள் நிறுவனங்களைப் போலவே, வேல்ஸ் மியூசிக் படங்களின் ஆடியோ உரிமைகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


வேல்ஸ் மியூசிக் நிறுவன தொடக்க விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார்.
- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று அவர் மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
- புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
- கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
- கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை!
சென்னை :
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்,
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!
எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!
மனிதம் காப்போம்! என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவை மேற்கொள்காட்டி, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?
கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை! என்று கூறியுள்ளார்.
- தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
- இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்.
புதுடெல்லி:
டெல்லியில் 9-வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-
நான் 'மேக் இன் இந்தியா' பற்றி பேசியபோது, பலர் அதை கேலி செய்தனர். அவர்களின் காலத்தில் புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய கணிசமான நேரம் பிடித்தது. ஒரு காலத்தில் 2 ஜி உடன் போராடிய நாடு தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பை அடைந்துள்ளது.
இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஜி ஸ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய உள்நாட்டு சாதனையாகும். இதன் மூலம், உலகில் இந்த திறனைக் கொண்ட 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இன்று இந்தியாவில் ஒரு ஜி.பி. வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விடக் குறைவு.
டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. அது தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.
இந்தியா மொபைல்கள், செமிகண்டக்டர்ஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல்
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, "இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்" என்று தெரிவித்தார்.
- காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.
- த.வெ.க. முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் வெளியில் வராமல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தமிழக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் மத்திய பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக திட்டமிட்டு உள்ளேன். இதற்கு காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இந்நிலையில் கரூர் செல்ல உள்ள விஜய்க்கு பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
டி.ஜி.பி.யிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. வழக்கறிஞர்கள், பாதுகாப்பு கோரியதாக கூறி விட்டு சென்றனர்.
த.வெ.க. குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.
எதுவுமே கூறாமல் செல்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, சாரி சார் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.






