என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
- கடைசி விக்கெட் ஜோடி 50 ரன்கள் குவித்து ஆட்டமிக்காமல் உள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் கேம்பல் மற்றும் சாய் ஹோப் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கேம்பல், டெஸ்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.
அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனால் வெஸ்ட் 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் 41 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் 50 ரன் முன்னிலைக்குள் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஜெய்டன் சீல்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் தேவையான நேரத்தில் ரன்களும் அடித்தார். மறுமனையில் க்ரீவ்ஸ் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்திய பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடி தாக்குப்பிடித்தது.
4ஆவது நாள் தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 91 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜஸ்டின் க்ரீவ்ஸ்- ஜெய்டன் சீல்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 12.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 50 ரன்கள் குவித்துள்ளது. க்ரீவ்ஸ் 35 ரன்களுடனும், சீல்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது.
- தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடலூர்:
கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.
தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
துல்கர் சல்மான்- ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.
துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படமான DQ 41-ல், அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.
சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.
இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு DQ41 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
- 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணிக்காக நம்பமுடியாத விஷயங்களை ரோகித் சர்மா செய்துள்ளார் என நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா விளையாட்டின் ஜாம்பவான். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளார். மேலும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.
என வில்லியம்சன் கூறினார்.
- மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது.
- ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
மத்தியபிரதேச மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 24 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் ராஜஸ்தானிலும் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை காஞ்சீபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த இருமல் மருந்தை தயாரித்த போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தியதால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவு மிகவும் அதிகரித்து அந்த குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருந்து நிறுவன உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 75) கைது செய்யப்பட்டார். ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
23 குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து தமிழகம், கேரளா, மத்தியபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த இருமல் மருந்து நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் 2011-ம் ஆண்டு உரிமம் வழங்கியது. அதன்பிறகு இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் சரியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து நிறுவன விவகாரத்தை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் முறையாக ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபாவின் வீடு சென்னை திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ளது. அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குனராக பணிபுரியும் கார்த்திகேயன் வீடு சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ளது. இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை 7.15 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
கார்த்திகேயன் வீட்டில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். கார்த்திகேயன் தனது அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் 2-வது தெருவில் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தனது மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரங்கநாதன் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து இருக்கிறாரா என்பதை அறிய அவரது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.
அதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டால், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார்களா? அப்படி ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் யார்? அவர்கள் முறையாக ஆய்வு செய்தார்களா அல்லது பெயரளவுக்கு நடத்தினார்களா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 20 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
- பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா (ஹமாஸ்) இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கி இருக்கிறது. காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,900 பாலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் ரிலீஸ் செய்ய வேண்டும் இதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலை.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர். எய்டன் மோர், கலி, கிவ்பெர்மன் உள்ளிட்ட பிணைக்கைதிகளும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை கேட்டு அவர்களது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல்–அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் பிணைக்கைதிகள் ரிலீஸ் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள். இஸ்ரேல் ராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.
இதற்கிடையே 2ஆவது கட்டகமாக 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இதனால் உயிரிடன் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.
பிணைக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காசாவில் உயிருக்கு பயந்து முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.
எகிப்தில் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்- சிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எகிப்து செல்வதற்கு முன்பாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
காசாவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. காசாவில் மறு கட்டமைப்பை உருவாக்க விரைவில் அமைதி வாரியம் அமைக்கப்படும். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதற்காக கத்தார் பெருமைப்பட வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிக சிறப்பாக பணியாற்றினார்.
தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லை. இந்த போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமை அளிக்கிறது.
இதுவரை எப்போதும் நடந்திராத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இஸ்ரேலுக்கு பிறகு நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த பெரிய நாடுகள், பணக்கார நாடுகள், பிற நாடுகள் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
- சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
புதுடெல்லி:
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்தும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதே போல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருதிக்கின் தந்தை பன்னீர் செல்வம், பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி பா.ஜ.க. தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை.
இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தீர்ப்பை 13-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் தீர்ப்பு கூறினார்கள். அதில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் இருப்பார்கள்.
இந்த குழுவில் உள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி மாதம்தோறும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டின் செயல்பாடு மற்றும் 2 பேர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் முறையிட்டனர். அதாவது மனுதாரர்களுக்கு தெரியாமலேயே அவர்களது பெயரில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பித்த 2 வழக்குகளில் மனுதாரர்கள் மனுவை தாக்கல் செய்யவே இல்லை. எனவே இதை சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதிகள், "மனுதாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடுவோம்" என்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது தமிழக வெற்றிக்கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
- சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி சிபுசோரன், கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது.
மேலும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.
அத்துடன் நாளைய சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து மற்ற 3 நாட்களில் வழக்கம் போல வினாக்கள் விடைகள் இடம்பெறும். பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- ஆர்யன் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
- இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜிப்ரான் இசையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று விஷ்ணு விஷால் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
- நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் தி.மு.க. எம்.பி. வில்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அருணா ஜெகதீசன் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட் விமர்சனத்தை முன்வைக்கவில்லை.
* இரு மனுக்கள் மனுதாரர்களுக்கு தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* இரு மனுக்களும் போலி என தெரிய வந்தால் தற்போதைய உத்தரவு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
* சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
* கரூர் நெரிசல் வழக்கில் ஐகோர்ட்டுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகும்.
* நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* வாய்க்கு வந்ததை பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா.
இவ்வாறு அவர் கூறினார்.
- ‘சிக்கந்தர்’ தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பேசுபொருளானது.
- ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.
சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும்.
எல்லாமே கம்ப்யூட்டர் கிராபிக்சிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
'சிக்கந்தர்' தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பெரும் பேசுபொருளானது.
இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், சிக்கந்தர் படம் குறித்த ஏ. ஆர் முருகதாஸ் விமர்சனத்திற்கு சல்மான்கான் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், 'சிக்கந்தர்' படம் குறித்து மக்கள் எதிர்மறையாக கூறுகின்றனர். ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் படத்தின் ஒன்லைன் மிகச்சிறப்பானது.
ஆனால் நான் படப்பிடிப்பில் இரவு 9 மணிக்கு தான் கலந்துகொள்வேன். அது பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தான் சொன்னார். அப்போது எனது விலா எலும்பு உடைந்திருந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் 'மதராஸி' என்ற பெரிய படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால், அதே சமயம் மதராஸி படம் சிக்கந்தர் படத்தை விட பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகிவிட்டது" என மதராஸி படத்தின் தோல்வி குறித்து கிண்டலாக தெரிவித்தார்.
- விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள்.
- தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த வருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சி.பி.ஐ. விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சி.பி.ஐ. விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?
எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?. தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சி.பி.ஐ. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல அவர்கள் செயல்படுவார்கள். அதனால் அதைப் பேசி பயனில்லை.
சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தோல்வி தான் என ஒப்புக்கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும் திசை திருப்பிவிடும்.
நாளையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கி விடுமா?. சி.பி.ஐ.யின் புலன் விசாரணை சரியாக இருக்காது. கேப்டன் விஜய காந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது தி.மு.க. அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் தி.மு.க. அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.
கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை.
ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்தது தான்.
விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.
எதையாவது செய்து விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






