என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்  - சபாநாயகர் அறிவிப்பு
    X

    சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் அறிவிப்பு

    • சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி சிபுசோரன், கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    அத்துடன் நாளைய சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து மற்ற 3 நாட்களில் வழக்கம் போல வினாக்கள் விடைகள் இடம்பெறும். பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    Next Story
    ×