என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.
    • மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

    மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாட்டுக்கு நான் மிகவும் வருத்தமடைந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

    • 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
    • அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.

    அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.

    கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

    இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.

    மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
    • காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது. 

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. 

    • ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.

    நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.

    இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

    அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.

    இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.

    • ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
    • பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.

    இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.

    • பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
    • முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள் நீக்கப்பட்டன.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, பாஜக மாநில தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.  

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டன.

    மாவட்ட வாரியாக, திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டன.

    இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த மாதம் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

    • திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
    • நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!

    திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, "I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

    நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
    • நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்ஸியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.

    அவர் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக ஒரு தம்பதி தேனிலவை ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மெஸ்ஸி ரசிகை கூறியதாவது:-

    கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்து விட்டோம். நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்சியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். அவரது கணவரும் இதே தகவலை தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.

    மதுரை:

    மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.

    மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.

    ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.

    ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார். 

    • தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது
    • இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்த்தால் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 8-தேதி தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்-கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    இதன் பயனாக தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. 2 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும் என்றார்.

    • உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 70 அடி உயரத்தில் உள்ள சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார்.
    • 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.

    மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

    மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×