என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 வெளியாகவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்து இருந்த நிலையில் அதன் முதல் எபிசோடை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் டைட்டில் டீசர் ப்ரோமோ படமாக்கப்பட்ட காட்சியை விவரித்து இருந்தது. அதில் கார்த்ஹ்டிக் சுப்பராஜ் சூர்யாவிடம் எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெயலாம் அதனால் சிங்கிள் டேக்கில் எடுக்கலாமா? என கேட்க அதற்கு அவரும் சிங்கிள் டேக் தான? பண்ணிரலாம் என சூர்யா கூறுகிறார்.

    படத்தின் ப்ரோமோஷனுக்கு இது ஒரு புதுவித முயற்சி ஆகும். வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் காமிக் ஸ்டைலில் படப்பிடிப்பு கட்சிகளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • எல்லா விடிவிலான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 98 போட்டிகளில் வெற்றி.
    • 50 ஒருநாள் போட்டிகளில் 36-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 119 ரன்கள் விளாச, இந்தியா 44.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.

    எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் கங்குலி தலைமையில் இந்திய அணி 97 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 98 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வரிசையில் எம்.எஸ். டோனி முதல் இடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், முகமது அசாருதீன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    எம்.எஸ். டோனி தலைமையில் இந்திய அணி 332 போட்டிகளில் விளையாடி 179-ல் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 213 போட்டிகளில் விளையாடி 137-ல் வெற்றி பெற்றுள்ளது. முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 221 போட்டிகளில் விளையாடி 104-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 136 போட்டிகளில் விளையாடி 98-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 50 போட்டிகளில் விளையாடி 36-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இதன்மூலம் ஒருநாள் போட்டியில் வெற்றி சராசரி அதிகம் வைத்துள்ள கேப்டன்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்டு 76.19 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 72 சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 71.73 சராசரியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    அப்பகுதியில் வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் ஒரு புறம் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகளும் மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெறுவதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மேற்கு மாட வீதி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் வரை வில்லிவாக்கம் பஸ்நிலையம் தற்காலிகமாக ஐ.சி.எப். ரெயில்வே முன்பதிவு மையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் பஸ்கள் தற்போது ஐ.சி.எப். பஸ்நிலையத்தில் இருந்து புதிய ஆவடி சாலைவழியாக சென்று நாதமுனி வழியாக வில்லிவாக்கம் வந்து மீண்டும் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பஸ்கள் தற்காலிகமாக நேற்று முதல் ஐ.சி.எப். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    அதன்படி தடம் எண். 20, 27டி, 23வி ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று 'யூ டர்ன்' எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பஸ் நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.

    வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். தடம் எண்.22 வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், தடம் எண். 63 திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் தடம் நீட்டிக்கப்பட்டு ஐ.சி.எப். வரை இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் ராஜேந்திர பார்மரிடம் பள்ளி முதல்வர் ஹிதேந்திர சிங் தாகூர் விசாரித்துள்ளார்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் பள்ளி முதல்வர், ஆசிரியர் ஒருவரை சரமாரியாக அடிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    நவ்யூக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ராஜேந்திர பார்மர் மாணவர்களை திட்டி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ராஜேந்திர பார்மரிடம் பள்ளி முதல்வர் ஹிதேந்திர சிங் தாகூர் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர், ஆசிரியரை 18 முறை அறைந்துள்ளார் .

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இது தொடர்பாக விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெவுள்ள நிலையில் சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, மதுரை- பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு ரெயில் 2 நாட்களும் மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

    • 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.
    • மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முறை முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

    இப்போது 2025- 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் சட்டசபை கூட உள்ள நிலையில் பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலாளர் முருகானந்தம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்களை பட்டியலிட்டார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு விசயமாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    சென்னையை சுற்றியிருக்கிற பெல்ட் ஏரியா என்று சொல்லக் கூடிய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய முடியாமல் இருப்பதும் நமது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து உள்ளார்கள்.

    அதன் பேரில் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.

    இதன்படி சென்னையில் மட்டும் 29187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 62-ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் மிகத் தெளிவாக ஒரு முடிவு எடுத்து 6 மாத காலத்துக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

    இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளை செய்ய உள்ளோம்.

    சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்ட மக்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைய இருக்கிறது.

    அதேபோல மற்ற மாநகராட்சிகளான மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஏனைய மாநகராட்சிகளில், இதேபோல பிரச்சனை இருக்கிறது.

    அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கிற மற்ற பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 57,084 பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    இன்னும் விடுபட்டவர்கள் மனு கொடுத்தால் அதையும் பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    • இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம்.
    • கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது 2-வது காரணமாக பார்க்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவாகும். மேலும் சமீபகாலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இந்தியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டதால், அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    மேலும் ஆம்ஆத்மி, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.

    எனவே இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம். தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே அங்கு கட்சியை வளர்க்க கெஜ்ரிவால் கவனம் செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
    • டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு மிரட்டல் வந்துள்ளது.

    அண்மைக் காலங்களாக விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. சில நாட்கள் முன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானத்துக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.

    இந்நிலையில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று விமான நிலைய வளாகத்தில் கிடந்துள்ளது.

    பெயர் எழுதப்படாத அந்த கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது.
    • சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இயக்குநர் அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் புதிய படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்டிபென்டென்ட் பாடல்களுக்கு இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் அட்லி இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா இணையும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார்.

    முன்னதாக இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருந்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைப்பார் என்று படக்குழு அறிவித்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
    • அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.

    இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். நேற்று ஏர் போர்ஸ் 1 விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்.

    அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன் தான் செய்லபட முடியும். காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காசாவில் எதுவும் இல்லை. அந்த இடம் ஒரு இடிபாடு தளம்.   மீதமுள்ளவையும் இடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    மேலும், "அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் பேசியுள்ளார்.

    அரபு நாடுகள் தன்னுடன் பேசிய பிறகு பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். "அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும்.

    போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும்" என்று கூறினார்

    சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் காசாவை பாலஸ்தீனத்திடம் இருந்து முற்றிலுமாக பறிக்க திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  டிரம்ப்பின் திட்டம் அப்பட்டமான மோசடி என ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    • பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும்.
    • மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

    பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திணை மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நோய் இல்லாததால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. தூக்கமும், ஊட்டச்சத்தையும் சார்ந்தது. மருத்துவ அறிவியலும் தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது. அனைவரும் காலை வெயிலில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும்.

    உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேர்வு பயத்தை எதிர்கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் உங்களை சவால் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    உங்கள் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள், நேர்மறைகளை கண்டறியுங்கள். உங்களை நீங்களே சவால் செய்வது எப்படி என்பதை அறிய உங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். எப்போதும் முந்தைய முடிவுகளை விட சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

    அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும் என்று மாணவர்கள் கருதக்கூடாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாணவர்களை அடைத்து வைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வத்தை ஆராய சுதந்திரம் வழங்க வேண்டும்.

    தலைவர்களின் நடத்தையில் இருந்து மக்கள் குறிப்புகளை பெறுகிறார்கள். பேச்சுக்கள் மட்டுமே உதவாது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×