என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
- ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.
உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
- குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜ் பால் மிட்டாய் போலவே இருக்கும்.
- பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டுள்ளார்.
பீஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் வு என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர் பால் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார்.
ஷுவாங் பாவோ என அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங் பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும்.
ஒருநாள் அவரது உறவினர் பட்டாசைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். அதை வூ மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டுள்ளார்.
ஸ்மாஷ் பட்டாசு என பொருள்படும் ஷுவாங் பாவோ நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும். இது சீன நாட்டில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின்போது பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பால் சாக்லேட் என நினைத்து வூ வெடியை பல்லைப் பயன்படுத்தி கடித்தபோது வெடித்தது. இதனால் அந்தப் பெண்ணின் வாயில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் வீட்டின் ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாக்கெட் ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு சிறுவயதில் நான் ரசித்த டாரோ பால் மிட்டாய்போல இருந்தது. எனவே அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தபோது அது திடீரென வெடித்தது என தெரிவித்தார்.
- விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை ஆர்சிபி தக்க வைத்தது.
- புதிய கேப்டன் யார் என்பதை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று அறிவிக்கிறது.
பெங்களூரு:
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.
ஆர்சிபி அணியை கடந்த சில சீசன்களாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார். நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டூ பிளெசிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்நிலையில், மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நிலவுகிறது.
ரஜத் படிதார் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணி கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என வெளிப்படையாகவும் படிதார் பேசியிருக்கிறார்.
ஆனால் பெங்களூரு அணியின் தேர்வாக விராட் கோலி இருக்கக் கூடும். அவர் இதற்கு சம்மதிக்க வேண்டும்.
இன்று காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் நலமுடன் இருக்கிறார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- விண்வெளி வீரர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என குறிப்பிட்டது.
இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது. மார்ச் 12-ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இதன்மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.
கராச்சி:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
- பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்துள்ளார்.
பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார்.
பவதாரிணி மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய பிறந்தநாள் மற்றும் திதி இன்று ஒரே நாளில் வந்துள்ளது.
அதனால், பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பலர் உருக்கமாக பவதாரிணியின் நினைவுகளை பிகிர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்துள்ளார்.
அதாவது, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவைத் தொடங்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், " பவதாவின் பிறந்தநாளும், திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. இது வேறு எங்கும் நடந்தது இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன
- நான் பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை.
மத நிந்தனையில் ஈடுப்பட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவானதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகமான பேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மத நிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒருவர் எனக்கு மரண தண்டனை பெற்றுத் தர முயன்றார்.
பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை, எனவே நான் அதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதித்து நடந்தும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலானது என்று அவர் மேலும் .தெரிவித்தார்.
- புதுமுக நடிகர் விஷ்ணு பிரகாஷ்க்கு ஜோடியாக அறிமுக நடிகை அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
- பி.ஜி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோமீலா நல்லையா தயாரித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஈசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'புயலில் ஒரு தோணி'. இதில் புதுமுக நடிகர் விஷ்ணு பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ராஜா பவதாரணி இசையமைத்திருக்கிறார். மணி வர்மா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை எஸ்.பி. அகமது மேற்கொண்டிருக்கிறார்.
க்ரைம், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பி.ஜி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோமீலா நல்லையா தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மறைந்த பாடகி பவதாரிணி நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவர் இசையமைத்த புயலில் ஒரு தோணி படத்தின் இசைத்தட்டை தந்தை இளையராஜா வெளியிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.
- எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள்.
அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை.
அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.
எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.
எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.
அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.
அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்தின் தொடக்க ஜோடி 6.2 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
- அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 214 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 10 ஓவர்கள வீசி 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.
இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். 7-வது ஓவரின் 2-வது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 6.2 ஓவரில் 60 ரன்னாக இருந்தது.
அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேல் பந்தில் வெளியேறினார்.
ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை மற்றும் பிற திட்டங்கள் போன்றவற்றால், மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை.
- இலவச ரேசன் பொருட்கள் மற்றும் எந்தவிதமான வேலை செய்யாமலும் பணத்தை பெற்று வருகிறார்கள்.
தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கி வருகிறது. டெல்லி தேர்தலின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், ஆம் ஆத்மி மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தன.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கான தங்குமிடம் உரிமை குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. ஒரு ஒட்டுண்ணி வர்க்கம் உருவாக்கப்படுகிறதா? என்று வியப்படைய வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்தனர்.
மேலும், நாட்டு வளர்ச்சியின் பங்களிப்பிற்கான, சமூதாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக அவர்களை ஊக்குவிக்காமல், நாம் ஒட்டுண்ணி வர்க்கத்தை உருவாக்குகிறோமா? என கேள்வி எழுப்பினர்.
நீதிபதி கவாய் "மகாராஷ்டிரா மாநிலத்தில் லட்கி பஹின் (Ladki Bahin) திட்டத்தின் மூலம் வருட வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள 21 வயது முதல் 65 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதேபோல் மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வழங்குகின்றன. துரதிருஷ்டவசமாக, தேர்தல்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் இலவசங்கள், பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை மற்றும் பிற திட்டங்கள் போன்றவற்றால், மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்கள் இலவச ரேசன் பொருட்கள் மற்றும் எந்தவிதமான வேலை செய்யாமலும் பணத்தை பெற்று வருகிறார்கள்" என்றார்.
அவர்களை பற்றிய உங்கள் கவலை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பில், சமூகத்தில் ஒரு பகுதியாக அவர்களை மாற்றுமா? என பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
அப்போது ஒரு மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் "அவர்கள் வேலை வாய்ப்பை பெற்றால், வேலைக்கு செல்லாமல் இருக்க விரும்பமாட்டார்கள்" என்றார்.
அப்போது நீதிபதி கவாய் குறிக்கிட்டு "நீங்கள் ஒரு பக்க அறிவை மட்டும் கொண்டிருக்கிறீர்கள். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலை கணக்கில் கொண்டு இலவசங்கள் அறிவிக்கப்பட்டது. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை" என்றார்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து.
- பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து
எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






