என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. கட்சி தொடங்கி 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளதால் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் வியூகம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வருவதால் அதுகுறித்தும் விசாரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை இல்லாதவர்களை நீக்கம் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் மறுசீரமைப்பு பணியை ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் சிக்கல் எனவும் கூறப்படுகிறது. மேலும் புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அதன்படி, திறன்பட செயல்படாத மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தயார் செய்யும் ஆதவ், அதனை விஜயிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் விஜய் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    • உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
    • ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

    புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.

    • 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
    • "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்"

    உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் கூகிள் நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகிள் நிறுவனம் திறந்து வைத்தது.

    பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய கூகுள் அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

    கூகிளின் ஆண்ட்ராய்டு, தேடல், பணம் செலுத்துதல், கிளவுட், மேப்ஸ், ப்ளே மற்றும் டீப் மைண்ட் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்ய உள்ளது.

    இந்த அலுவலகத்தில் 'சபா' என்று அழைக்கப்படும் மைய இடம் உள்ளது. இது கூட்டங்கள் மற்றும் பட்டறைகளுக்குப் பயன்படுத்தப்படும். பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக நடக்க சிறப்பு தொட்டுணரக்கூடிய தரை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அலுவலகம் குறித்து பேசியுள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் நாட்டு மேலாளருமான பிரீத்தி லோபனா, "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று தெரிவித்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன்களின் உற்பத்தியைத் தொடங்கியது. மும்பை, ஐதராபாத், புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் கூகுள் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவோம்.
    • "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!

    சென்னை :

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் 'தமிழ் வெல்லும்' என்று அண்ணாதுரை கையெழுத்திட்டதை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று,

    நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,

    எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்! என்று தெரிவித்து உள்ளார். 



    • தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல.
    • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.

    சென்னை :

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.

    தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.

    தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.

    இனியும் வீழ்த்தும்.

    "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம் என்று தெரிவித்துள்ளார். 



    • தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை ஏற்றம் செய்ததை விட தமிழை வைத்து தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டது தான் அதிகம்.
    • கலைஞர் தன் மகளுக்கு கனிமொழி என்று பெயர் வைத்துவிட்டு சர்ச் பார்க்கில் தான் படிக்க வைத்தார்கள்.

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று தாய் மொழிகளின் தினம்... நம் தமிழ் மொழியை போற்றுவோம்...

    ஆனால்...ஒரு மாநிலத்தில் தாய் மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான்... ஆனால் அந்த அளவிற்கு... அரசியல்வாதிகள் தமிழை ஆராதித்தார்களா என்றால். . தங்கள் குழந்தைகளை கூட தமிழை ஆரத்தழுவ விடவில்லை.. ஏன் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் கூட பெயர் வைக்கவில்லை.. என்பதே உண்மை.. அதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு.. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது... தமிழக அரசியல்வாதிகள்.. குறிப்பாக திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடைகளில் தமிழைப் பேசிவிட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் சேர்க்கவில்லை ஆளும்போது கூட தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற உரிமையை கூட தமிழர்களுக்கு கொடுக்கவில்லை பத்தாவது வரை கல்வி தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்று வரை போராடித்தான் வருகிறோம்...

    தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை ஏற்றம் செய்ததை விட. தமிழை வைத்து தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டது தான் அதிகம்... என் அப்பா நான் ஆறாவது வரை தமிழ் வழி கல்வி தான் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்... ஆனால் தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். பல பேர் தங்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழி அல்லாத. பிரபலமான ஆங்கிலப் பள்ளிகளில் தான் படிக்க வைத்தார்கள். அன்று பாமரனுக்கு ஒரு நீதி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி. என்றே தமிழை வைத்து தமிழக அரசியல் சுழன்று கொண்டிருந்தது... இன்றும் அதே நிலைதான்...

    ஆரம்பக் கல்வி முழுவதும் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்ற வழி வகை செய்யும் புதியகல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.... தாய்வழி... தாய்மொழி கல்விக்கு வழிவகை செய்யும் ஒரு திட்டத்தை. மொழி திணிப்பு திட்டமாக மடைமாற்றம் செய்கிறார்கள்... இதில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழகப் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்... ஏன் ஆரம்ப கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும்..?

    குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக பலமானவர்களாக வலம் வருவார்கள்... அதேசமயம்... புட்டிப் பால் குழந்தைகள் அந்த ஆற்றலில் சற்று குறைபடவும் வாய்ப்பு இருக்கிறது... அதேபோல் தான் ஆரம்பக் கல்வி தாய்மொழிக் கல்வியாக இருந்தால் நம் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாக விளங்குவார்கள் என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது... இன்று வரை தமிழகத்தில் ஆரம்பக் கல்வி தாய்மொழி அல்லாத கல்வி நிலையங்கள் தான் அதிகம்... தமிழன் இன்னும் ஏமாற்றப்படக்கூடாது... தமிழுக்காக பேசுபவர்கள் தமிழுக்கு எதிராக பேசுபவர்கள் போலவும் தமிழை அரசியல் ரீதியாக போற்றுகிறோம் என்று ஏமாற்றுபவர்கள்... தமிழக குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தன் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தமிழை பிரதான படுத்துவதில் தோல்வி அடைந்தவர்கள் ஏதோ தமிழுக்காக அவர்கள் தான் வாழ்பவர்கள் போலவும் ஓர் தவறான தோற்றம் தமிழகத்தில் நிலவுகிறது...

    தாய்மொழி தமிழுக்காக பேசுகிறோம் என்று தமிழுக்காக வெளியே பேசுபவர்கள்... எத்தனை பேர்... தமிழை பிரதானமாக கற்றுக்கொடுக்காத கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகளை தமிழை பிரதானமாக கற்றுக் கொடுக்காத பள்ளிகளில் படிக்க வைத்தார்கள்... பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதை ஆராய்ந்தாலே இவர்கள் தமிழை வைத்து தமிழனை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படும்... தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடுவது என் நோக்கமல்ல ஆனாலும் கலைஞர் அவர்கள் தன் மகளுக்கு கனிமொழி என்று பெயர் வைத்துவிட்டு சர்ச் பார்க்கில் தான் படிக்க வைத்தார்கள்... பல அரசியல்வாதிகளின் குழந்தைகள். தமிழ் பிரதானமாக அல்லாத மான்போர்ட் பள்ளி போன்ற பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்பட்டார்கள்... தமிழர்களே மறுபடியும் உங்கள் பெயரைச் சொல்லி அரசியலில் ஏமாற்ற திராவிட மாடல் கும்பல்கள் தயாராக இருக்கிறது...

    தமிழ் மொழியை காப்போம்.. தமிழ் வழி கற்போம்... நம் தமிழ் குழந்தைகளை காப்போம்... நம் தாய்மொழி காப்போம்... நம் உயிர் தமிழ் மொழி காப்போம்... என்று தெரிவித்துள்ளார்.

    • உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
    • ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..

    மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..

    எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.

    ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..

    இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. என்று தெரிவித்துள்ளார்.


    • கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. துவாரகா மற்றும் பெட் துவாரகாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பிறகு 18 ஆண்டுகளாக அங்கு எந்த அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.) துவாரகா கடலில் ஆழ்கடல் அகழாய்வை தற்போது தொடங்கி உள்ளது. தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அலோக்திரிபாதி தலைமையிலான 5 ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை தொடங்கியதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முதல் முறையாக அபராஜிதா சர்மா, பூனம்விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்வினா என்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    • எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது
    • பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும்.

    உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

    சிறப்பு ரெயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தில் டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் தொடர்பான வீடியோக்களை அகற்ற இந்திய ரெயில்வே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும். கண்டதை பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பட்ட இந்த நோட்டீசில் எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது தற்போது பொது வெளியில் தெரியவந்துள்ளது.

    இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரெயில்வே செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர்களை இவ்வாறு சித்தரிப்பது தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.  

    • ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது.
    • போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தீவிரமாகி வருகிறது. மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க. அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், மும்மொழி கொள்கை ஏன் அவசியம் என்பது குறித்து மாநில பா.ஜ.க. வாதம் செய்து வருகிறது.

    மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்கமாட்டோம் என்று அரசு சார்ந்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியை எதிர்க்கும் யாரெல்லாம் இந்தி மொழி உடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அண்ணாமலையும் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே, அண்ணாசாலைக்கு வந்து பார்க்கட்டும் என்று துணை முதலமைச்சர் கூற அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் அங்கு வரட்டும்.. இடத்தை கூறுங்கள்' என்று அண்ணாமலை கூற தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

    இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் வாழ்க' என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது. இதனை ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.

    இதனிடையே இன்று சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 'தமிழ் வாழ்க' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

    • இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
    • லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது.

    ரெயில் இன்ஜின் ஓட்டுனர்கள் பணிக்கு முன் அல்லது பணியின் போது இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.

    திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், லோகோ பைலட்டுகள், இளநீர், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    ரெயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது

    ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

    இதுபற்றி கேட்டால் தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக ரெயில் இன்ஜின் டிரைவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இவை அனைத்தையும் உட்கொள்ள தெற்கு ரெயில்வே தடை விதித்துள்ளது.

    ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரெயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது. "பழுதடைந்த ஆல்கஹால் பரிசோதனை உபகரணங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்களை தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய குழு உறுப்பினர் பி.என். சோமன் வலியுறுத்தியுள்ளார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.520-ம் நேற்று சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,560-க்கு விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,025-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,200-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

    18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    19-02-2025- ஒரு கிராம் ரூ.108

    18-02-2025- ஒரு கிராம் ரூ.108

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    ×