என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர்.
- ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சீமான் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அவர் திடீரென்று சீமான் மீதான புகாரை கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றார். இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவருடைய கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான புகைப்படங்கள், 'ஆடியோ' உரையாடல்கள் போன்ற தகவலை சேகரித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் வெளிக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் கதவை தட்டினார்.
உடனே சீமான் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாம்பரத்தை சேர்ந்த அமல்ராஜ் கதவை திறந்து விட்டார். ஆனால் போலீசாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கும், காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
காவலாளி அமல்ராஜை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்றார். அப்போது போலீசாருடன் மல்லுக்கட்டினார். சீமான் வீட்டின் வளாகத்துக்குள் போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த களேபரத்தின் முடிவில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் சேர்ந்து காவலாளி அமல்ராஜின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர். ஆனால் காவலாளி அமல்ராஜ் போலீஸ் ஜீப்பில் ஏற மறுத்தார். இதனால் ஜீப்பில் வைத்தும் மோதல்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையில் காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துக் கொண்டார். துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வழியாக கடும் போராட்டம் நடத்தி காவலாளி அமல்ராஜை கைது செய்து நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், சீமான் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மன் நோடீசை கிழித்ததாக அவரது வீட்டின் பணியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சீமான் வீட்டில் இல்லை. அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அவருடைய மனைவி கயல்விழி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் பதறியபடி வெளியே வந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார்.
ஆனால் போலீசார் காவலாளியையும், பணியாளரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
தனது வீட்டின் காவலாளியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது, சீமானின் மனைவி கயல்விழி வெளியே வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.
சீமான் வீட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் காவலாளி தாக்கியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் 2 போலீஸ்காரர்கள், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளியும், பணியாளரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கார்த்திகேயன் இருவரையும், வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
- சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை துணி போட்டு வேகவைப்பதற்கு பதிலாக பாலிதீன் போட்டு அதன் மீது இட்லி மாவு ஊற்றி வேக வைக்கப்படுகிறது.
இதில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சுமார் 51 உணவக இட்லி மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
- விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
- சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மடக்கி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலீஸ்காரர் வாகனத்தை மடக்க வேண்டும் என்றும், சப் - இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.
- மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கும், தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் என் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவதில்லை. ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழக கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.
இந்த முறை என் பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்று தமிழ்நாடு தனது உயிர்பிரச்சினையான மொழிப்போர் மற்றும் உரிமை பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூகநல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலத்தை காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம். தற்போது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக்குரல் வந்துள்ளது.
இதை பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று கூறி அதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்காததால் இன்றும் நமக்கான பணத்தை கொடுக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்ல மறுக்கிறார்கள். நாம் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி செய்தால் அதை தமிழ்நாடும், தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். நன்றி வணக்கம்," என்று கூறியுள்ளார்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-16 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அமாவாசை காலை 7.17 மணி வரை. பிறகு பிரதமை நாளை விடியற்காலை 4.40 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 3.04 மணி வரை. பிறகு பூரட்டாதி.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கோவை ஸ்ரீகோணியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீசைலம், திருவான்மியூர் கோவில்களில் ஸ்ரீசிவபெருமானுக்கு திருக்கல்யாணம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லி தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-போட்டி
கடகம்-அமைதி
சிம்மம்-கவனம்
கன்னி-நிம்மதி
துலாம்- பக்தி
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பண்பு
மகரம்-வெற்றி
கும்பம்-நன்மை
மீனம்-பாசம்
- ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
- அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.
- பூட்டிய வீட்டுக்குள் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் இறந்து கிடந்தார்.
- இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அதன்பின் 1970-களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இதையடுத்து, நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மாட்டியோ பெரெட்டேனி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டான் செல்ல பஸ்சுக்காக இளம்பெண் காத்திருந்தார்.
- தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கி வந்தான்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் புனே ஸ்வர்கேட்டில் உள்ள பஸ்நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்குச் செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார்.
தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கிவந்தான். அந்த ஆசாமி, இளம்பெண்ணிடம் பார்த்து நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என் கூறிய அவன், பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றான்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான சிவ்சாகி என்ற சொகுசு பஸ்சை காட்டி, இதுதான் நீங்கள் போகவேண்டிய ஊருக்குச் செல்லும் பஸ் என கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்கு எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என்றான். இளம்பெண், பஸ்சுக்குள்ஏறிச் சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவைப் பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடி அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தைச் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த தத்தாத்ரேய காடே (36), என தெரிய வந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதற்கிடையே, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தத்தாத்ரேய காடே புனேவின் ஷிரூரில் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே செபி அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.
- இவர் மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
கடந்த 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடி மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
- சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
இதற்கிடையே, கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசிவரை ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவுக்கு வரவே இல்லை.
இந்நிலையில், கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, உ.பி.யின் அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் துறவி கூறுகையில், கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை. தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவில்லை. பிரயாக்ராஜ் அவர்களது சொந்த குடும்ப பூமியாக இருந்தும் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். இந்தத் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிரானவர்கள். உலக நாடுகளில் இருந்து பலரும் வந்த மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? என்றனர்.






