என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மறுதினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 12-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 14, 15-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 11-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.
    • பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    கடந்த வியாழன் முதல் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அந்நாட்டின் சிறுபான்மையினரான அலாவைட்  பிரிவை பின்பற்றுபவர்கள் பலரை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.

    எனவே மூன்று மாதங்களுக்கு ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அலாவைட்டுகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில்தான் சிரியாவின் அலாவைட்கள் அதிகம் இருக்கும் கடலோர மாகாணமான லடாகியாவில் தற்போது வன்முறை வெறியாட்டங்கள் வருகின்றன.

     

    பிரிட்டனைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுதப் படையைச் சேர்ந்த 148 பேரும் இந்த உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் அலாவைட் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது.

    வன்முறையைக் கட்டுப்படுத்த, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளைப் பாதுகாப்புப் படையினர் மூடிவிட்டனர். கண்ணில் படுபவர்களை அரசு படைகள் மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொல்வதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    எங்கும் சடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகிறது என்றும் வன்முறையின் போது நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்தும் அங்கிருந்தவர்கள் அசோசியேட்டட் பிரஸ் (AP) ஊடகத்திடம் விவரித்துள்ளனர்.

    அங்கு பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக அசோசியேட் பிரஸ் பேட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பனியாஸ். இங்கு சாலைகளிலும் கட்டிடங்களின் கூரைகளிலும் இறந்த உடல்கள் கிடந்தன. துப்பாக்கி ஏந்தியவர்கள் அங்கிருந்தவர்களை உடலை புதைப்பதைத் தடுத்தனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அலாவைட் கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தில் பலரின் வீடுகள் சூறையாடப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அசோசியேட் பிரஸ் அறிக்கை தெரிவிகிறது.

    மக்கள் தங்கள் வீடுகளும் கார்களும் எரிவதைக் கண்டதும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் உயிர் பிழைக்க முடிந்தது, பலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

    • இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஐ.சி.சி.-யின் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    எனினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை ஒரு போட்டியில் கூட டாஸ் வென்றதில்லை. அந்த வகையில், இந்திய அணி இறுதிப் போட்டியில் டாஸ் வெல்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மனம்திறந்து பேசியுள்ளார்.

    அப்போது, "என்னை பொருத்தவரையில், இந்திய அணி டாஸ் வெல்ல கூடாது. அவர்கள் தோற்க வேண்டும் என்று தான் நான் கூறுவேன், நியூசிலாந்து அணி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும். இது இந்தியாவை தந்திர சூழலில் தள்ளும். இந்தியா இதுவரை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது, வெற்றிகரமாக பந்துவீசியும் இருக்கிறது."

    "தனிப்பட்ட முறையில், நான் இந்தப் போட்டி 54-46 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கிறேன். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அணி," என்று தெரிவித்தார்.

    • காங்கிரசில் இருந்துகொண்டு பாஜகவுக்காக உழைக்கும் கட்சித் தலைவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
    • அந்த வகையில் ராகுல், பாஜகவின் மிகப்பெரிய துருப்புச் சீட்டு என்று தெரிவித்தார்.

    இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கட்சியினரிடையே உரையாற்றினார்.

    கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரசில் இருந்துகொண்டு, பதவிகளை வகித்துக்கொண்டு பாஜகவுக்காக உழைக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி பதிலளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, 140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவர் (ராகுல் காந்தி) குஜராத்தில் கட்சித் தொண்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி வெற்றிக்கான மந்திரத்தை அவர்களுக்குக் கற்பிக்கிறாராம்.

    இது அவர்கள் கட்சியின் உள் விவகாரம் என்றாலும், அவரது பேச்சுக்கள் நிச்சயமாக காங்கிரசின் அவலநிலையையும், மோசமடைந்து வரும் அவரின் மனநிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அரசியலமைப்பு நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களைத் தொடர்ந்து குறை கூறிய பிறகு, அவர்கள் இப்போது தங்கள் சொந்த கட்சியினரையே குறை கூறத் தொடங்கியுள்ளனர்.

    ஒரு தலைவர் தனது சொந்தக் கட்சியினரையே இப்படிப் பகிரங்கமாக அவமதிக்கும் உதாரணத்தை நீங்கள் ஒருபோதும் காண முடியாது.

    ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக மோசமான தலைவர் என்பதை உணர்வார். ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, காங்கிரசின் நிலை மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த மற்றோரு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஜாத் பூனாவாலா, ராகுல் காந்தி குஜராத்தில் தன்னையும் தனது கட்சியையும் ட்ரோல் செய்து, தன்னை ஒரு கண்ணாடியாகக் காட்டிக் கொண்டார்.

    அவர் தனது தோல்விகளுக்கு கார்கே ஜியையும் அவரது சொந்தக் கட்சித் தொண்டர்களையும் குற்றம் சாட்டுகிறார். ஆனால் 90க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தனது கட்சியை ராகுல் தான் தோற்கடித்தார். அந்த வகையில் ராகுல், பாஜகவின் மிகப்பெரிய துருப்புச் சீட்டு என்று தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
    • திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசி உள்ளார். திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இதன் மூலம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை காட்ட தொடங்கி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • சுவாமி நாராயணன் கோவில் அமைந்துள்ளது.
    • பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினோ ஹில்ஸ் பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவில் போன்ற புனித தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

    "சினோ ஹில்ஸ்-இல் உள்ள இந்து கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போன்ற சம்பவங்களை மிக கடுமையாக கண்டிக்கிறோம். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்," என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சாஸ்தா (பாப்ஸ்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது. சினோ ஹில்ஸ் மர்றும் தெற்கு கலிபோர்னியாவில் வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க இணைந்து போராடுவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

    மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்தினர்.
    • "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அவரின் புகாரில், மேற்கூறிய நடிகர்கள் நடித்த பான் மசாலா விளம்பரங்களில், " தானே தானே மெய்ன் ஹை கேசர் கா தம் (பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது)" என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது.

    எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும் நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

    • நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
    • தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * டெல்லியில் தமிழக எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டு செயலாற்றிட வேண்டும்.

    * ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான்.

    * நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.

    * ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    * நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.

    * தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.

    • இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
    • தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * மும்மொழிக் கொள்கை பிரச்சனையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும்.

    * இந்தி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர, இந்தி மொழியையோ அந்த மக்களை இல்லை.

    * இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.

    * இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா? என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டம் நடக்கும்போது அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும்.

    * தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை.

    * தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    * டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டு செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    • சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
    • ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார்.

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமீபத்தில் மும்பையில் உள்ள போரிவலி ரெயில் நிலையத்தில் அந்தப் பெண் நகரும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

    நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரெயில்வே காவலர் விரைவாக அப்பெண்ணை நோக்கி ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

    இதை இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ள ரெயில்வே அமைச்சகம் நகரும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

    ×