என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம்.
    • சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.

    இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார்.

    மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.

    இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி. சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்று வர ஜீப்பில் ஏறி சென்றார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து அறிந்த டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் உடனடியாக கிளை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான போலீசாரும், வக்கீல்களும் கிளை சிறைச்சாலை அருகில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார்.

    காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.

    அதற்கு நீதிபதி, அப்படியென்ன போலீஸ் அதிகாரிக்கும், நீதிபதிக்கும் முன்பகை இருக்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அரசு வக்கீல், ''துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிபதிக்கு எதிராக சில புகார்களை தெரிவித்தார். அதற்காக பழிவாங்கும் விதமாக நீதிபதி செயல்பட்டுள்ளார். பேக்கரியில் மோதல் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. கடந்த 4-ந்தேதி ஏன் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனே போலீசார் அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் ஏன் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி, நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை துணை போலீஸ் சூப்பிரண்டை கோர்ட்டில் அமரவைத்து, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 4-ன் கீழ் துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மாவட்ட நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

    அதேபோல, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தரப்பிலும் வக்கீல் ஒருவர் ஆஜராகி வழக்கு தொடரப்போவதாக கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தாக்கல் செய்தால், இன்று பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார். மேலும், ''இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ வழக்கத்துக்கு மாறான சம்பவம் நடந்துள்ளது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி.யை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்
    • இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    நேற்று மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

    இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், "டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து அவர்களிடம் பேசினேன்.எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைவரும் வலிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு என்னுடைய கருத்துக்களை அவர்களிடம் கூறினேன். ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.

    • அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே.
    • தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்.

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

    கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன், இது 'ஹிட்' அடிக்கும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே, 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து 'சூப்பர் ஹிட்'அடித்துள்ளது.

    தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடைய வேண்டும் என்றால் இந்தப் பயணங்களில் வெற்றியடைந்தால் மட்டும் போதாது. வரவிருக்கும் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும். இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் நாள் தொடங்கினோம்.

    சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறக் களத்தில் பணியாற்றிய அத்தனை நிர்வாகிகளிடமும், நான் பாராட்டினேன் என்று சொல்லுங்கள். ஏனென்றால், நான் மகிழ்ச்சியோடு சொல்றேன்… ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.

    உங்கள் எல்லாருக்கும்– ஏன், உங்கள் மூலமாக கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன்… தேர்தல் முடியும் வரைக்கும் "ஓய்வு" என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்! ஏனென்றால், 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி.

    எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள். ஃபேக் நியூஸ் - டைவர்ஷன் பாலிட்டிக்ஸ் என்று மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதுதான் அவர்களால் முடியும். மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க நம்மால்தான் முடியும். அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான் வரும் செப்டம்பர் 17 முப்பெரும் விழா.

    அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, BLA, BDA, BLC-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை. இதுதான் தொடக்கவிழா கூட்டம்.

    தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும்.

    முப்பெரும் விழாவில்– திமுக உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாக வந்து போவதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும்- மாவட்டக் கழகச் செயலாளருமான செந்தில் பாலாஜி, விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்டக் கழகச் செயலாளர்களும் செந்தில் பாலாஜிக்கு துணையாக இருக்கவேண்டும்.

    முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை திமுக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்.

    நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே.

    அதற்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்.

    • பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
    • இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள முக்கியமான இடங்களை சுற்றி பார்த்து விட்டு செல்வார்கள். இங்கிருந்து செல்லும்போது மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்து செல்வார்கள்.

    இந்நிலையில் ஒரு வருடம் இந்தியாவில் தங்கலாம் என நினைத்து வந்த ரஷியாவை சேர்ந்த லூலியா அஸ்லமோவா என்ற பெண் கடந்த 11 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், இந்தியாவின் மீதான தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய பாரம்பரிய உடையில், நெற்றியில் பொட்டு வைத்து வீடியோவில் காட்சி அளிக்கும் அவர், பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

    மேலும் இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் பண்பை புகழ்ந்துள்ள அவர், இந்தியா காந்த சக்தி கொண்ட நாடு என புகழாரம் சூட்டியுள்ளார்.

    இந்தியா மிகவும் பாதுகாப்பானது எனவும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
    • வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
    • சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    சென்னை ராயபுரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான கேள்விக்கு காது கேட்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த மாதம் சென்னையில் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இன்று ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் செய்தியாளர்கள் அந்த கேள்வியை மீண்டும் கேட்க, காது கேட்கவில்லை என்று அவர் பதில் அளித்தார்.

    மேலும், ராயபுரம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தொந்தரவாக சிலர் மது அருந்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் சரக்கு அடிப்பதில்லை" என்று சேகர்பாபு பதில் அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    • தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
    • பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார்.

    சிம்லா:

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை இமாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் புறப்பட்டார்.

    இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில மீட்புப்படையினரையும் அவர் சந்தித்தார்.

    இமாச்சல பிரதேச பயணத்தை முடித்த பிறகு இன்று மாலை பிரதமர் பஞ்சாப் செல்கிறார்.

    • மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
    • காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது.

    தூத்துக்குடி:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க.வை சேர்ந்த வேலூர் இப்ராகிம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர் போராட்டம் நடத்தவில்லை.

    ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளர். போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தபோது அதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை.

    தற்போது முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்தது குறித்து இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆளுங்கட்சியால் தொடர்ந்து மிரட்டல்கள் நடந்து வருகிறது.

    குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தமிழரான தற்போது மகாராஷ்டிர கவர்னராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.

    மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீங்கள் செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் எங்களது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப்பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களது விருப்பம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான்.

    ஆனாலும் அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது என்றார்.

    தொடர்ந்து, நீங்கள் டெல்லி செல்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக 11-ந் தேதி டெல்லி செல்வேன் என்றார். அப்போது செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற கேட்டபோது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.

    பின்னர் செங்கோட்டையனை பின்னால் இருந்து தூண்டுவது பா.ஜ.க.தான் என்றும், அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே எல்லா பிரச்சனைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் தி.மு.க. அரசாங்கம்தான் காரணம் என்றார்.

    • ஒப்போ ஃபைண்ட் X9 மாடலின் இடதுபுற மூலையில் ஒரு செவ்வக கேமரா டிரே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
    • லென்ஸ் முந்தைய X8 சீரிசில் அல்ட்ரா மாடலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டு இருந்தது.

    ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் X9 சீரிஸ் மாடல்களுக்கான டீசர்களை வெளியிட்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் சீரிசின் தலைவர் இன்று ஃபைண்ட் X9 மாடல் ஸ்கிரீன் புகைப்படத்தை வெளியிட்டு, ஃபைண்ட் X9, ஃபைண்ட் X8s-ஐ விட இன்னும் குறுகலான திரையை கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

    மேலும், 1.25மிமீ பெசல்கள் கொண்ட ஃபைண்ட் X8s மற்றும் 1.34மில்லிமீட்டர் பெசல்கள் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் ஒப்பீட்டு படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மெய்சூ 22 ஸ்மார்ட்போன் 1.2மில்லிமீட்டர் டிஸ்ப்ளே பெசல்களைக் கொண்டிருக்கும் என்பதை Meizu உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    டான்சியா லென்ஸுடன் கூடிய ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ்

    இந்த வார தொடக்கத்தில், டான்சியா லென்ஸ் ஒப்போ ஃபைண்ட் X9 சீரிசின் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்த லென்ஸ் முந்தைய X8 சீரிசில் அல்ட்ரா மாடலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டு இருந்தது.

    அவர் வெளியிட்ட முன்னோட்டப் படத்தில், நான்காவது தலைமுறை ஸ்மார்ட்போன் இமேஜ் கலர் ரீ-ஸ்டோரேஷன் தொழில்நுட்பத்தில் இமேஜிங் லென்ஸ்கள், டான்சியா கலர் ரீ-ஸ்டோரேஷன் லென்ஸ்கள் மற்றும் உலகளாவிய மல்டி-ஸ்பெக்ட்ரல் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

    ஒப்போ ஃபைண்ட் X9 மாடலின் இடதுபுற மூலையில் ஒரு செவ்வக கேமரா டிரே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஃபைண்ட் X9 சீரிஸ் கீக்பென்ச் தளத்தில் ஒப்போ CPH2791 மாடல் நம்பருடன் காணப்பட்டது. அதில் இந்த ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9500 பிராசஸர், 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 ஆகியவை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் 1.5K 120Hz OLED ஸ்கிரீன் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுவதை தெரிவித்தன. மிக நீண்ட பேட்டரி ஆயுளைத் தவிர, ஒப்போ ஃபைண்ட் X9 அனைத்து அம்சங்களிலும் நம்பமுடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தது என்றும், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் திரைப்படம் 4 நாட்களின் முடிவில் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இந்தியில் பாகி 4 மற்றும் பரம் சுந்தரி போன்ற திரைப்படங்கள் ஓடிக்கொடிருப்பதால் இப்படத்தை யாரும் பார்க்க பெரிதாக முன்வரவில்லை.

    இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

    • பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    • பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
    • அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் பிரிக்ஸ் நாடுகள் உயிர்வாழ முடியாது.

    இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.

    இவ்விவகாரத்தில் இந்தியாவை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா, சீனா, ரஷியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் உயிர்வாழ முடியாது. இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவிற்கு விற்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அவர்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்கும்போது தங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள்.

    பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள். வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் ரஷிய எண்ணெயை வாங்கியதில்லை. போருக்கு பிறகுதான் ரஷிய எண்ணெய் வாங்க தொடங்கியது.

    ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுடன் எங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்து இந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். ரஷியா, சீனாவுடன் கூட்டணி வைப்பது இந்தியாவுக்கு நல்ல முடிவை தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக உள்ளது என்றும் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆலோசகர் தொடர்ந்து இந்தியாவை கடுமை யாக விமர்சித்து வருகிறார்.

    ×