என் மலர்
சினிமா செய்திகள்

வருகிற 13-ந்தேதி இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
- நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
- வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






