என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சேதமைடைந்த விஷ்ணு சிலையை சீரமைத்து மீண்டும் நிறுவக்கோரி மனு
    • கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள் என கவாய் கருத்து தெரிவித்திருந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவன வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. இப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இந்த நிலையில் நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவால் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக நான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் சித்தரித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் ஒருவர் தெரிவித்தார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.

    • டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
    • பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

    எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்!? என்று திமுக IT Wing தனது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?

    2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?

    3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?

    4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

    5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?

    செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்கா இந்திய பொருட்களுக்க பரஸ்பர வரியாக 25 சதவீதம் அமல்படுத்தியது.
    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், 25 சதவீதம் தண்டனை வரியாக விதித்தது.

    அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாததால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுப்பு தெரிவித்ததால் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி தண்டனை (Penal) வரி என அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இது பொருளாதாரத் தடை என விமர்சிக்கின்றன. இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா 25 சதவீத வரியை நீக்கலாம் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

    கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வி. ஆனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நாம் அனைவரும் வேலையில் இருக்கிறோம். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வரி விதிப்பு குறித்து பேச இருக்கிறேன். ஒரிஜினல் பரஸ்பர 25 சதவீதம் வரி, தண்டனை 25 சதவீதம் வரை ஆகியவை நாம் எதிர்பார்க்காதது.

    புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இரண்டாவது 25 சதவீத வரிக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 30 க்குப் பிறகு தண்டனை வரி இருக்காது என்று எனது உள்மனது சொல்கிறது. இதற்கான குறிப்பிட்ட எந்த காரணமுல் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் அபராத மற்றும் பரஸ்பர வரி விதிப்பு குறித்து ஒரு தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..

    எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..

    நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.

    சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

    மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.

    இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இப்படம் இன்று முதல் பிரைம் வீடியோ மற்றும் நாளை டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

    • சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான ஆல் டைம் லெவன் அணியை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

    அதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு இடம் அளிக்கவில்லை.

    இந்த அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம் எஸ் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.

    தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-

    ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.

    • எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர் FIR பதிவு.
    • தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் சாக்கு போக்கு தேவையில்லை. கர்நாடக மாநில சிஐடி-யிடம் ஆதாரங்களை வெளியிடுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர், உள்ளூர் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக சிஐடி 18 மாதங்களில் ஆதாரங்களை கேட்டு 18 கடிதங்கள் எழுதியுள்ளது. அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக தேர்தல் ஆணையம் பலமுறை வேண்டுகோள் விடுத்தது. தலைமை தேர்தல் ஆணையர் அதை தடுத்துள்ளார்.

    ஐ.பி., டிவைஸ் போர்ட்ஸ், ஓடிபி டிரையல்ஸ் போன்றவை மறைக்கப்பட்டன.

    வாக்கு திருட்டு பிடிபடவில்லை என்றால், 6018 வாக்குகள் நீக்கப்படிருக்கும். எங்களுடைய வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சாக்கு போக்கு விளக்கத்தை நிறுத்தவும். இப்போதே கர்நாடகா சிஐடி-க்கு ஆதாரங்களை கொடுக்கவும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே

    சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    தற்போது வெளியாகியுள்ள 'பாம்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிஎஸ்கே. 'லப்பர் பந்து' படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் 'பாம்' படத்தில் நடித்தது குறித்தும் அடுத்தடுத்து வரவிருக்கும் தனது படங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் டிஎஸ்கே..

    "லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். 'பாம்' படத்தில் அப்படியே முற்றிலும் மாறான பாசிட்டிவான கதாபாத்திரம். ஆனாலும் இந்த படத்திற்கான கதாபாத்திரம் எனக்கு லப்பர் பந்து படத்திற்கு முன்பாகவே தேடி வந்த ஒன்று.. 'பாம்' படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை பார்த்து வியந்துபோய் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    ஆனால் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து பாம் படத்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லி இதில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்று சொன்னது மட்டுமல்ல, இந்த கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னபோது என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆச்சரியப்பட வைத்தது. அவரும் என்னைப் போல அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர் தான் என்பதால் மறக்காமல் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படம் பார்த்த பலரும் லப்பர் பந்து, பாம் இரண்டு படங்களுக்கும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நீங்கள் அதில் பொருந்தி விடுவீர்கள் என பாராட்டியபோது இயக்குநர் விஷால் வெங்கட்டின் நம்பிக்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டது.

    லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக தேடி வந்தது. அங்கே 'விலாயத் புத்தா' என்கிற படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்..

    படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் மலையாள திரையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார் பிரித்விராஜ். அது மட்டுமல்ல இயக்குநரிடம் என்னைப் பற்றி பேசும்போது 'ஈ ஆள் வலிய வேலைக்காரன்' என்றும் பாராட்டியுள்ளார். என்னடா வேலைக்காரன் என்று சொல்கிறாரே என நான் குழம்பியபோது, படத்தின் இயக்குநர் அவர் உங்கள் நடிப்பு திறமையை பாராட்டி தான் அப்படி கூறினார் என்று சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

    தமிழில் அமீர், அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில், மீண்டும் லப்பர் பந்து படத்தில் நடித்தது போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். செல்வகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஜனவரியில் வெளியாக இருக்கிறது.

    இது தவிர டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். கனா, லேபிள், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக பணியாற்றிய' பிரகாஷ் பாஸ்கர் டியர் ஜீவா படத்தை இயக்குகிறார்.

    ஹி இஸ் பிரக்னண்ட் ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது. தற்போது பாலாஜி சக்திவேல் சாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது என்னுடைய 25வது படமாக உருவாகி வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக இருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வருகின்ற படங்களும் கதாபாத்திரங்களும் அதை வலுப்படுத்தும் விதமாகவே தேடி வருவது கூடுதல் சந்தோஷம்" என்கிறார் டிஎஸ்கே..

    • குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்ய சென்றனர்.
    • துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர்.

    அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
    • சீன-தைபே ஜோடியை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    சீனா மாஸ்டர் பேட்மிண்டனில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி நேர்செட் கேமில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன-தைபேயின் சியு-வாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-13, 21-12 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    அதுபோல் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பி.வி. சிந்து தாய்லாந்தின் சோச்சுவாங்கை 21-15, 21-15 என வீழ்த்தினார். சோச்சுவாங்கிற்கு எதிராக பி.வி. சிந்துவின் வெற்றி 6-5 என உள்ளது.

    முன்னதாக, மலேசிய ஜோடியான ஜுனைதி ஆரிஃப்- ராய் கிங் யாப்பை 24-22, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    முதல் கேமில் இந்தியா- மலேசியா ஜோடிகள் மாறிமாறி புள்ளிகள் பெற்றன. இதனால் இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்றது. இறுதியாக இந்திய ஜோடி 24-22 என முதல் கேமை வென்றது.

    2ஆவது கேமில் 5-5 என சமநிலையில் இருந்து நிலையில், இந்திய ஜோடி 11-6 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மலேசிய ஜோடியால் இந்திய ஜோடியை முந்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    என்றபோதிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    சாத்விக்- சிராஜ் ஜோடி கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்ட்டோ ஜோடியும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது.

    • தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
    • தங்க சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.

    அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர். இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர்.

    பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள் கூறும்போது, "டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும்.

    டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்" என்றனர்.

    • டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
    • 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கு புதிய "கிரிஸ்டல் பிளாக் பேர்ல்" நிறத்தை சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையுடன், அமேஸ் செடான் மாடல் இப்போது லூனார் சில்வர், மீடியோராய்டு கிரே, பிளாட்டினம் ஒயிட், கோல்டன் பிரவுன், ரேடியன்ட் ரெட் மற்றும் அப்சிடியன் புளூ உள்பட மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

    இளம் வாடிக்கையாளர்களிடையே அடர் மற்றும் ஸ்போர்ட்டியர் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், புதிய நிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹோண்டா கூறுகிறது.

    புதிய நிறம் தவிர, இந்த காரில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா அமேஸ் மாடல் தொடர்ந்து 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.



    அம்சங்களை பொருத்தவரை அமேஸ் மாடல் DRLகளுடன் ஆட்டோமேடிக் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.

    ஜிஎஸ்டி 2.0 இன் முழு பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் தலைமுறை அமேஸ் ரூ. 95,000 வரை விலைக் குறைப்புகளை பெறுகிறது.

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×