என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • இரும்புக் கம்பியால் காலை அடித்து உடைத்த காவல்துறை
    • இளைஞர் ஆகாஷ்மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்துவருகிறது.

    கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசிலவையே மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை.

    அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருவரை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதின்போது தப்ப முயற்சித்து பாலத்திலிருந்து விழுந்து ஆகாஷின் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்காக மாற்றப்பட்டதாகவும் கூறினார்.

    ஆனால் அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுமா என்னும் கேள்வி சிறுகுழந்தைக்குக் கூட எழும். ஆனால் காவல்துறை மரணத்திற்கு காரணமாக இதைக்கூறியது. 

    ஆனால் தனது மகன் காவல்துறையினராலேயே அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    அதனைத்தொடர்ந்து வெளிவந்த ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட் வாக்குமூலங்களும் அவரது மரணத்திற்கு காவல்துறையே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. போலீசாரே தனது காலை உடைத்ததாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது உடலை உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. 

    இந்நிலையில் அவரது உடற்கூராய்வு முடிவுகள் வெளிவந்து காவல்துறையே இந்த மரணத்திற்கும் காரணம் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதன்படி ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலதுகாலின் நடுப்பகுதியில் எலும்புகள் முறிந்திருந்தாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆகாஷ் போலீசார் தாக்குதலிலேயே உயிரிழந்தார் என்பது தெளிவாகியுள்ளது.

    • தமிழ்நாட்டின் தனித்துவமான கடலோர துறைமுகத்துடன் அமைக்கப்பட்ட முதல் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • மாநிலத்தின் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்ய துணைபுரிவதுடன், வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்வது குறைக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின் வாயிலாக மின் உற்பத்தியை பெருக்குவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, தமிழ்நாடு எரிசக்தித் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    அண்மையில் வட சென்னை அனல் மின் நிலையம் III-ல் மின் உற்பத்தி அதன் முழு கொள்ளளவான 800 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வணிக பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதன் அடுத்த கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ரூ.13,077 கோடி செலவில் பாரத மிகுமின் நிறுவனம் வாயிலாக நிறுவப்பட்டுள்ள 2X660 மெகாவாட் மிக உய்ய அனல் மின் நிலையத்தின் அலகு 1-ன் பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக மின் உற்பத்தியை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தார்.

    மிக உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்படும் அனல் மின்நிலைய திட்டங்கள் பிற அனல் மின் திட்டங்களை ஒப்பிடும்போது, 5 முதல் 6 சதவீதம் வரை அதிக திறன் மிக்கது ஆகும். எனவே, இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்க்கு எரிபொருள் செலவு குறைவதுடன் மின் உற்பத்தியினை தொடங்குவதற்கு குறைவான நேரமே தேவைப்படும்.

    இந்த அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தமிழ்நாட்டின் தனித்துவமான கடலோர துறைமுகத்துடன் அமைக்கப்பட்ட முதல் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கடலோரத்தில் பிரத்யேகமாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளங்கள் மூலம் இரண்டு முழுவதும் மூடிய அமைப்புள்ள கன்வேயர் பெல்ட் வாயிலாக மணிக்கு தலா 2000 டன் நிலக்கரியை நேரடியாக மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிலக்கரி போக்குவரத்து செலவு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற உதவுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி நுகர்வு 0.50 முதல் 0.55 கிலோ கிராம் அளவு மட்டுமே தேவைப்படுவதால், கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாகவும் உள்ளது.

    இம்மின் நிலையத்திற்கு தேவையான குளிரூட்டும் கோபுரம், பாய்லர், பணியாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் அனல் மின்நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவே பெறப்படுவதால் நிலத்தடி நீர் மற்றும் தாமிரபரணி நீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 400 கிலோ வோல்ட் வளிம காப்பு துணைமின் நிலையம் வாயிலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு மின் பகிர்மானம் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரித்து, மாநிலத்தின் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்ய துணைபுரிவதுடன், வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்வது குறைக்கப்படும்.

    உடன்குடி மின் திட்ட வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 1½ லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 52 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மின்சார தேவைக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும்.

    விழாவில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, இயக்குநர் (திட்டங்கள்) ஜான் டால்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது.
    • தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அடுத்து கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

    இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக வால்பாறைக்கு சுற்றுலா செல்லக்கூடியவர்கள் கீழே உள்ள ஆழியார் அணை, கவியருவியில் குளித்து விட்டே மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி நிலவுகிறது.

    கவியருவிக்கும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று முதல் ஆழியார் கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    தற்போது கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அருவியில் உடைந்து காணப்படும் தடுப்பு கம்பிகள், மரக்கட்டைகளை அகற்றி விட்டு, புதிதாக கம்பி அமைக்கப்படும். மீண்டும் மழை பெய்து நீர்வரத்து தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!
    • நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!

    இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரெயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

    அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், "பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்" என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.

    இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!

    தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!

    எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தென்னந்தோப்பு.
    • எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? என்பது வருகிற தேர்தலில் தெரியும்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று கட்சி பெயரை அறிவித்தார்.

    அந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம். இது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது பற்றுக் கொண்ட தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சி என்றும் அதில் தன்னை இணைத்துக்கொள்வதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.

    கட்சியின் பெயரை அறிவித்த பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. என்ற தீய சக்தியை வேரறுக்க தமிழகத்தை காக்க எம்.ஜி.ஆர். இயக்கத்தை தொடங்கினார். அதன் பிறகு ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை வகுத்து மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்களை கொடுத்தார். அவர் பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைய திட்டங்களை கொடுத்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் பிறகு எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. தமிழக மக்களை தி.மு.க. கசக்கி பிழிகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஜெயலலிதா பிறந்த நாளில் கழக கொடியை அறிமுகப்படுத்தினேன். தொண்டர் ஒருவர் ஆரம்பித்த கட்சியை எம்.ஜி.ஆர். நடத்தினார். எனக்கும் அந்த சூழ்நிலை வந்திருக்கிறது.

    எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பற்றுள்ள தொண்டர் ஒரு கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். அந்த கட்சியின் பெயர் அனைத் திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

    சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தென்னந்தோப்பு. இயற்கையாகவே எங்களுக்கு நல்ல சின்னம் அமைந்திருக்கிறது. நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர வேறு எண்ணமே எனக்கு கிடையாது.

    அதனால் நான் மக்களோடு இருப்பேன். அதற்கு இந்த சின்னமே ஒரு சான்று. ஒரு கூட்டுக் குடும்பம் போல் இந்த சின்னம் அமைந்திருக்கிறது. இது மக்களின் சின்னம்.

    வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிலும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் வருவார்கள். அது உங்கள் வீட்டு சின்னம். அது மக்களுக்கான சின்னம். நிச்சயமாக தமிழக மக்கள் எங்களோடு இருப்பார்கள். புதுச்சேரி மக்களும் ஆதரவு தருவார்கள்.

    சிலர் யாருமே கூட்டணியில் வேண்டாம், முக்கியஸ்தர்கள் கட்சியில் வேண்டாம் என்று தனியாக போவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நாங்கள் கூட்டணியுடன்தான் தேர்தலை சந்திப்போம். நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கணும். எங்கள் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வந்தவர்கள். தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்.

    தனி மரம் தோப்பாகாது. நாங்கள் தோப்போடு வந்திருக்கிறோம். அந்த தோப்பு என்பது கழக தொண்டர்கள், தமிழக மக்கள். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? என்பது வருகிற தேர்தலில் தெரியும்.

    எங்களுடன் ஒரே கருத்துள்ள கட்சிகள் இணைந்து கூட்டணியாக செயல்படுவோம். எங்களின் வாங்கு வங்கியை தேர்தல் முடிந்ததும் நீங்களே பார்ப்பீர்கள்.

    மக்கள் பிரச்சினைகளை தீர்க்க 2 பிரதான கட்சிகளும் தீர்க்கவில்லை என்பதை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகளை பெறுவேன். இனி எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமையும். எங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். அவர்கள் நியாயத்தை பார்ப்பவர்கள். முதுகில் குத்த மாட்டார்கள். நல்ல மனம் படைத்தவர்கள், நல்ல தீர்ப்பை அவர்கள் கொடுப்பார்கள்.

    தி.மு.க. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. தி.மு.க. ஆட்சியை ஓட ஓட விரட்டுவதுதான் எங்கள் வேலை. அதற்காக தமிழ் நாட்டு மக்களை எங்களோடு சேர்த்துக் கொள்வோம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். நான் முதலமைச்சர் வேட்பாளரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாசுக்கும் சேர்த்து பில் போட்டு உள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

    சென்னை:

    அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    வணிக சிலிண்டர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

    ஓட்டல் உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளது. சில ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாசுக்கும் சேர்த்து பில் போட்டு உள்ளனர்.

    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சமையல் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில், தமிழகம் முழுவதும் பலர் கியாஸ் ஏஜெண்சிகளை முற்றுகையிட்டு சிலிண்டர்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் கியாஸ் சிலிண்டரை போன்று பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும், இதனால் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது என்றும் நேற்று முன்தினம் மாலையில் திடீரென வதந்தி பரவியது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர். தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டது போக, கேன் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை பிடித்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சார்பிலும் பெட்ரோல்-டீசல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினரும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எனவே பொதுமக்கள் அது தொடர்பாக பீதியடைந்து பெட்ரோல் பங்க்குகளில் மொத்தமாக குவிய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இருப்பினும் நேற்று பகலில் பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. இன்று 3-வது நாளாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க்குளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களில் தேவையான அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசலை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். இதனை அனைத்து பங்க் உரிமையாளர்களும் முழுமையாக கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்" என்றார்.

    அதே நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் எப்படியாவது பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதில் பொதுமக்கள் சிலர் உறுதியாக இருந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு பெட்ரோல் நிலையங்கள் சிலவற்றில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பீதி 3-வது நாளாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

    • இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது.
    • சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள புலிவலம் நல்லவாணிப்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (வயது 13). கரட்டாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.

    பின்னர் நல்லவாணிபட்டியில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் வாலிபால் விளையாட சென்றிருந்தார். அப்போது நல்ல வாணிப்பட்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவருக்கும், செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியது. இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் செல்வத்தின் பெற்றோர் மகனின் நெற்றி பொட்டு சற்று வீங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி அவரிடம் கேட்டபோது வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன்னை தாக்கியதாக கூறினார். லேசான வீக்கம் தானே சரியாகிவிடும் என கருதி விட்டுவிட்டனர்.

    இந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து செல்வம் வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை தூக்கிக் கொண்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தலையில் ஏதேனும் அடிபட்டு உள்ளுக்குள் ரத்தம் உறைந்து சுயநினைவு இழந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி செல்வத்தின் தந்தை சரவணன் புலிவலம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறில் சக மாணவன் தாக்கியதால் செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பள்ளிச் சிறுவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் பணிகள் இருப்பதால் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு விஜய் சி.பி.ஐ.யிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவல கத்தில் விசாரணை நடந்தது.

    மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு கட்சி தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    ஏற்கனவே 2 முறை விசாரணைக்கு விஜய் ஆஜராகி உள்ள நிலையில் மீண்டும் அவர் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    தேர்தல் பணிகள் இருப்பதால் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு விஜய் சி.பி.ஐ.யிடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகலாமா? எனவும் கேட்டிருந்தார்.

    ஆனால் சி.பி.ஐ. 15-ந்தேதி டெல்லியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை மதியம் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    15-ந்தேதி காலை சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். அவருடன் த.வெ.க. நிர்வாகிகள் சிலரும் டெல்லி செல்கின்றனர்.

    • அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
    • ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரமான திருப்பூரில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள ஏராளமான பிரியாணி கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் போதிய சிலிண்டர் விநியோகம் இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    சாதாரணமாக ரூ.1700 முதல் 2,000 வரையில் விற்பனை செய்யப்படும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.3,500 முதல் 4,000 வரை விற்பனை செய்கின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதனால் கடந்த 2 நாட்களாக மங்களம் சாலை , டவுன் ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சில பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது விற்பனை செய்யும் விலைக்கு ஏற்ப சிலிண்டர் வாங்கி சமைத்து விற்பனை செய்யும்பட்சத்தில் நஷ்டமே ஏற்படும் என கடைகளை பூட்டியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புரட்சி தலைவி அம்மா வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துகிறார்.
    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென்மாவட்டங்களுக்கு அவரை சுற்றுப்பயணம் செய்ய வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தேர்தல் சுற்றுப்பயண பணியை தென்காசி மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ். இன்று முதல் தொடங்கி உள்ளார்.

    தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சன்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மண்டபத்திலும், இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில், அந்த ஓட்டுகளை ஒருங்கிணைத்து அதனை தி.மு.க.வுக்கு கொண்டு வருவதற்காக ஓ.பி.எஸ். தென்மாவட்டங்களில் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்த பின்னர் தென்மாவட்ட அரசியலில் சாதி ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கள்ளர், மறவர் சமுதாயத்தின் ஓட்டுகளை கவர அந்த சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை ஓ.பி.எஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி என தென்மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது.
    • தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர்.

    ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா இன்று கட்சியின் பெயரை அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் (அஇபுதமமுக) என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். சசிகலா தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது:

    * ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது.

    * தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர்.

    * வரும் சட்டசபை தேர்தலில் அ.இ.பு.த.ம.மு.க. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்.

    * வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவேன்.

    * ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்.

    வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு நாங்கள் எப்போதும் தோப்பு என அவர் விளக்கம் அளித்தார்.

    ×