என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விளையாட்டில் தகராறு: 8-ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை?- மற்றொரு மாணவர் தாக்கியதால் விபரீதம்
- இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது.
- சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள புலிவலம் நல்லவாணிப்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (வயது 13). கரட்டாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.
பின்னர் நல்லவாணிபட்டியில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் வாலிபால் விளையாட சென்றிருந்தார். அப்போது நல்ல வாணிப்பட்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவருக்கும், செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியது. இருவரும் மாறி, மாறி அடித்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் சக மாணவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் செல்வத்தின் பெற்றோர் மகனின் நெற்றி பொட்டு சற்று வீங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி அவரிடம் கேட்டபோது வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன்னை தாக்கியதாக கூறினார். லேசான வீக்கம் தானே சரியாகிவிடும் என கருதி விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து செல்வம் வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை தூக்கிக் கொண்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தலையில் ஏதேனும் அடிபட்டு உள்ளுக்குள் ரத்தம் உறைந்து சுயநினைவு இழந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி செல்வத்தின் தந்தை சரவணன் புலிவலம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறில் சக மாணவன் தாக்கியதால் செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பள்ளிச் சிறுவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






