என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், டெக்ஸ் தொழில் அதிபர் மற்றும் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஆஜராகினர்.
அதனை தொடர்ந்து கரூர் துயர சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்டம், ஓடு வந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணை செயலாளர் நவலடி என்பவர் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கும் அழைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்த நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்காக ஆஜராகினர்.
குறிப்பாக கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- மனுதாரர் தரப்பில், 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள்தொகை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
- நீதிபதிகள், திட்டம் நிராகரிக்கப்படவில்லை, விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில், மதுரையில் மெட்ரோ திட்டங்களை அமைப்பதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மெட்ரோ ரெயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. இதன் காரணமாக கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவ்வாறெனில் 20 லட்சத்துக்கு அதிகமாகவே மதுரையின் மக்கள்தொகை இருக்கும்.
ஆகவே மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் அனுப்ப தமிழக திட்டமிடல் மேம்பாட்டு துறையின் தலைமைச் செயலருக்கும், மத்திய அரசு அதனை பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள்தொகை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், திட்டம் நிராகரிக்கப்படவில்லை, விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. எப்படி இந்த நிவாரணத்தை வழங்குவது? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
- பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசிய லமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை.
- பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் தி.மு.க. அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.
ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
- வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரதது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அதே ஊரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜின் மனைவி ஜெயராணி ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, சாத்தான் குளம் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
- அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025-ஆம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த உயரிய விருது, The Global Energy and Environment Foundation (GEEF)-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2025 (Global Sustainability Awards 2025) நிகழ்வில் வழங்கப்பட்டது. நவம்பர் 20-ந்தேதி புதுடெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-இன் போது இந்த விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்த்து விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்களிடம் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அறிவியல் முறைப்படி மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த அங்கீகாரம், சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்தன்மை இலக்குகளுக்கான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலைத்தன்மை விருதை (Global Sustainability Award) பெற்றுள்ளது என்பதும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.
- கவர்னர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் கவர்னருக்கு ஏன் வயிறு எரிகிறது.
ஈரோடு:
மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது:-
* பா.ஜ.க. ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது.
* பயங்கரவாத தாக்குதலை தடுக்காத பா.ஜ.க. ஆட்சியை கவர்னர் புகழ்ந்து பேசுகிறார்.
* கவர்னர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும்.
* தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் கவர்னருக்கு ஏன் வயிறு எரிகிறது.
* தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு கவர்னர் பாடம் எடுக்க வேண்டாம்.
* தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக கவர்னர் அவதூறு பரப்புகிறார்.
* மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள்.
* கவர்னர் ஆர்.என்.ரவி இப்படியே தொடர்ந்து பேசினால் தான் எங்களுக்கு வேலை ஈஸி என்றார்.
- தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?
- எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல...
ஈரோடு:
ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?
* கார் மாறி மாறிச்சென்று பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரிடம் கோரிக்கை வைக்காதது ஏன்?
* எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலத்திற்கு செய்த பச்சை துரோகங்களில் Latest Addition கோவை மெட்ரோ ரெயில் திட்டம் ரத்தானது.
* எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, உழவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகி.
* முதுகெலும்பை இழந்து கர்ச்சீப்பை முகத்தில்வைத்து சுற்றுவதால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து தோல்வி பழனிசாமி பெயரை கொடுத்துள்ளது என்றார்.
- வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க.
- SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
* தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது.
* ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன்.
* தி.மு.க. அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது.
* வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க.
* SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.
* வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம் என்றார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.
- பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
சமீபத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான். இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன். தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா. இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ். என்று தெரிவித்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம் தரவும் வாய்ப்பு உள்ளது. த.வெ.க.வின் மாநில நிர்வாகிகள் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொடுக்க அக்கட்சி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் தி.மு.க.வுக்கு எதிராக பேசியதில்லை என்றும், அவர் தி.மு.க.வின் 'பி-டீம்' எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்த நிலையில், செங்கோட்டையனை தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான அரசியல் நகர்வுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் தி.மு.க.விற்கு செல்வாரா? த.வெ.க.விற்கு செல்வாரா? என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரிந்து விடும்.
- தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
- 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன்.
* தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை.
* தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
* ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.
* டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.
* ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
* மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
* கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
* புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.
* சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.
* ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும்.
* தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
* பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.
- முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
- தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அ.தி.மு.க. சார்பாக 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கேயம் அழைத்து வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.
அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார்.
முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்.
தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை. அதேபோல், தனக்கென ஆதரவாளர் வட்டத்தையும் சேர்க்க அவர் விரும்பியதில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும், அதே விசுவாசத்தோடு இருந்தவர் செங்கோட்டையன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் இருந்தவர் செங்கோட்டையன்.






