என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்.
- ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
இதனால் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது SIR பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பின் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
இந்த நிலையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய 6 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 15-ஆம் தேதி பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா.
- சுமார் 24 மொழிகளில் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு 'ருத்ராட்ச தீட்சை' வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, உலகிலேயே அதிக மக்களால் நேரலையில் பார்க்கப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சுமார் 24 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இணையதளங்கள் வழியாக 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி நாள் இரவில் மஹாமந்திர உச்சாடனம் மற்றும் சக்திவாய்ந்த தியானங்களை சத்குரு வழிநடத்த உள்ளார். இதனுடன் மக்களை இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும் வகையில் பாரத பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

கேரளாவில் உள்ள பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள கோயில்களிலேயே திரளாகக் கூடி, அந்தப் புனிதமான இரவின் ஆற்றலை நேரடியாக அனுபவிக்க ஈஷா தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க
- கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள்.
பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள், 'தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்' என தெரியவில்லை என அன்புமணி தரப்பை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க. அக்கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது" என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இப்போது இந்த வாதத்தை மாற்றிக் கொள்கிறோம் என தேர்தல் ஆணையமே ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. அதற்கு நீதிமன்றம் மாற்றமாட்டோம், பதிவு செய்துகொள்கிறோம் என கூறுகிறது.
தற்போது தேர்தல் ஆணையத்தை இவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதன்மூலம் ஒரு பொய்யான அறிக்கையை சமர்பிக்கிறார்கள். மறுசீராய்வு மனு என்பது 30 நாட்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் போடுகிறது. இதன் உள்நோக்கம் எங்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள். அதற்கு நீதிபதி அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கமுடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர்." என தெரிவித்தார்.
- நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
- ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
* ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி.
* நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் ராமதாசிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.
* ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் அவருக்கு தவறான தகவல்களை சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள்.
* ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பேசினார்.
- அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
- அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.
* சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.
* தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.
* பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
* கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.
* இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.
* தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.
* அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
* அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
* துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.
- தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
- ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாநிலம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தின் எதிரில் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழக அரசு தற்போது வருவாய் துறை மூலமாக சாதாரண ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500யும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000யும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது.
தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6000யும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10000யும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15000 உதவித்தொகையாக வழங்கி வருகின்றனர்.
இதேபோல் பாண்டிச்சேரியில் ரூ.5800யும், தெலுங்கானாவில் ரூ.4016யும், டெல்லியில் ரூ.5000யும் வழங்கி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே வழங்கி வருகின்றனர்.
எனவே ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
- அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
13-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.
- இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள சென்னை மண்டல கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள், பழ வகைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.
2025-2026-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "திருக்கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோவில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை வேப்பேரி பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.
இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதா சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் உலகாரிய இராமனுஜ எம்பார் சுவாமிகள், மேயர் பிரியா, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் துரை. ரவிச்சந்திரன், ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- ‘பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப்பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, கவர்னரின் ஒப்புதலுக்கு காலதாமதமானதால், அந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.
'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்' 'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித் தலைவி அம்மா' '7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு' என்று எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏற்கனவே நான் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கி முதலமைச்சர், தான் புதிதாகக் கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.
வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது' என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- மாணவி ரக்சிதா மயங்கி விழுவதற்கு முன்பு தன்னுடைய நெற்றியில் பூச்சி கடித்ததாக ஆசிரியரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரக்சிதா (வயது 9) பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக ஒத்திகை நிகழ்ச்சியில் தனியார் மண்டபத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.
நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி உடலை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மாதேஸ்வரன், தாய் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள குமரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கையும் கொடுங்கள். அதையும் முதல்- அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் மாணவியின் குடும்பத்தினர் சாலை மறியலை கைவிட்டனர்.
மாணவி ரக்சிதா மயங்கி விழுவதற்கு முன்பு தன்னுடைய நெற்றியில் பூச்சி கடித்ததாக ஆசிரியரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதிய ஜனதா கட்சியால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
* சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.
* அமெரிக்காவிடம் பிரதமர் தலைகுனியக்கூடாது, அவர் தலைகுனிவது இந்தியாவே தலைகுனிவது போன்றது.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.
- 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கல்வி தான் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.
* பெண்கள் என்றாலே அழகு தான், அப்படிப்பட்ட பெண்ணுக்கு அறிவு தான் அழகு.
* படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.
* தமிழகம் உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு உயர கல்விதான் காரணம்.
* தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் தான் உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டியிடுகிறது.
* பெண்களின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல அது நாட்டின் வளர்ச்சி.
* நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* வெற்றிக்கு கடின உழைப்பு தேவை. கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது.
* 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
* ரூ.14,000 மதிப்புள்ள கருப்பை வாய் தடுப்பூசியை தமிழ்நாடு நமது சிறுமிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
* நீங்கள் அனைவரும் எனக்கு மகள்கள் தான்.
* பெற்றோர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






