என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை.
    • அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.

    தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் அப்போதே தண்டிக்கப்பட்டனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்துக்கு பதில் இல்லை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்பு திறமையான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர். அவரை போல யாருமே இல்லை. அந்த பதவிதான் அவருக்கு நல்ல பொருத்தம். அவர் எதிர்க்கட்சி தலை வராக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் மது கிடைக்காது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் கிடைக்கிறது. கனிமொழி பலமுறை பொய்மொழி ஆகி விடுகிறார். அவர் ஸ்டிக்கர் ஒட்டும்பணியை சிறப்பாக செய்கிறார். நல்ல ஆட்சி வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும். தமிழகத்தில் இரட்டை இலை வளர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மது விற்பனையை வைத்து அரசு இயங்குகிறது. பார் நடத்த அனுமதி கொடுத்து கட்சிக்கு நிதி திரட்டுகிறார்கள். நம்மை சுற்றி எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை இரவு 9 மணிக்கு மேல் எங்கேயாவது நடைபயிற்சி போக சொல்லுங்கள் பார்க்கலாம்.

    தமிழகத்தில் நடக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் போராட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் என மக்களின் எந்த பிரச்சினைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது. ஜன நாயகன் பட விவகாரம் கோர்ட்டு வரை சென்றதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களில் தவறான பயனாளர்களுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 10 கோடி பேருக்கான நிதி தடுக்கப்பட்டு, தகுதியான பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

    கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதற்கு மாறாக தி.மு.க. அரசு மலிவான மதுவை மக்களுக்கு வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது. வளர்ந்த இந்தியா வேண்டுமென்றால் வளர்ந்த தமிழ்நாடு அவசியம். ஆனால் வளர்ந்த தமிழ்நாடு உருவாக தி.மு.க. அரசு தடையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா அன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
    • பிப்ரவரி 14-ந்தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்திய மந்திரி அமித்ஷா கடந்த மாதம் திருச்சி வருகை தந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

    அதேபோல் பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் அடுத்தமாதம் (மார்ச்) 1-ந்தேதி மதுரை வருகை தர உள்ளார். மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் அடிக்கடி தமிழகம் வந்து செல்கின்றனர். மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகை தர உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா அன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் பிப்ரவரி 14-ந்தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காரைக்கால் நகராட்சி திடலுக்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அமித்ஷா வருகையையொட்டி மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட உள்ளனர்.

    மேலும் திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பாரதம் அடுத்த தசாப்தம் என்ற பெயரில் தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பா.ஜ.க. சார்புடைய தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    அமித்ஷா இரண்டு நாட்கள் திருச்சியில் இருப்பதால் 13-ந்தேதி மாலை அல்லது 14-ந்தேதி தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • செட்டிநாட்டு சமையலை அடிப்படையாக வைத்து செட்டிநாடா என்றுதான் கேட்டேன்.
    • தமிழ்ச்சாதி என்பதை மட்டுமே பெருமையக கருதுபவவவன் நான்.

    அமெரிக்காவில் உணவு உபசரித்த தமிழ் பெண்ணிடம் சாதியைக் கேட்டதாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால், ராஜாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில், ராஜா விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவனல்ல நான்.

    எந்த ஊர் என்று கேட்டதற்கு காரைக்குடி என்று சொன்னவரிடம் செட்டிநாடா என்று கேட்டதாகவே நியாபகம்.

    செட்டிநாட்டு சமையலை அடிப்படையாக வைத்து செட்டிநாடா என்றுதான் கேட்டேன்.

    தமிழ்ச்சாதி என்பதை மட்டுமே பெருமையக கருதுபவவவன் நான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்று மாற்றம் இல்லை.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    • மாநாட்டில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.
    • காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று மாலை சென்னை விழுப்புரம் மண்டல "என் வாக்குச் சாவடி! வெற்றி வாக்குச் சாவடி!" மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.

    பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது. பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து, சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகவும் எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாபெரும் மண்டல மாநாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி குழுவினருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் எழுச்சியுரையாற்றுகிறார்.

    • மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.
    • புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வருகிற 18-ந்தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

    கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. இதேபோல, 300 பூங்காக்கள் சீரமைப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட 62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. கல்வி, சாலை வசதி, போக்குவரத்து, மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
    • 13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை துணை கமிஷனர் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். 11-ந் தேதி இரவு சென்னை வரும் அவர்கள், 12 மற்றும் 13-ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

    12-ந் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு, அதன் பின்னர் வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

    13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) ஆலோசனை துணை கமிஷனர் மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    • கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார்.
    • அந்த சமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனிதநேயத்துடன் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. வக்கீலான இவர் தின மும் திருச்சி கோர்ட்டுக்கு சென்று அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி தனது ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு சென்றார். ஸ்கூட்டரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கட்டிடம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் காலை 11.30 மணி அளவில் அவரது ஜூனியர் வக்கீல் அலறி அடித்துக்கொண்டு கணபதியை பார்க்க ஓடோடி வந்தார்.

    அவர் கணபதியிடம், உங்களது ஸ்கூட்டர் இருக்கை மீது ஒரு துண்டுச்சீட்டு உள்ளது. அந்த சீட்டில் 'இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    அதோடு வாகனத்தின் பதிவு எண்ணும், தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் அந்த துண்டுச்சீட்டு பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு சிறிய கல்லையும் யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென்றுள்ளார் என்று கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணபதி பதறி அடித்துக்கொண்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். ஸ்கூட்டர் இருக்கை மீது இருந்த துண்டுச்சீட்டை பார்த்துவிட்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கோர்ட்டுக்கு விரைந்து வந்து, ஸ்கூட்டருக்குள் சோதனையிட்டனர். ஆனால் அங்கு பாம்பு இல்லை.

    இருப்பினும் வக்கீலின் வேண்டுகோளை ஏற்று. ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி பார்த்தனர். அப்போது இண்டிகேட்டருக்கு பின்னால் சிறிய சாரைப்பாம்பு மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து பைக்குள் போட்டு, அங்கிருந்து கொண்டு சென்றனர்.

    கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார். அந்த சமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனிதநேயத்துடன் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த துண்டுச்சீட்டின் மூலம் வாகனத்துக்குள் புகுந்த பாம்பு சிக்கியது. இந்த சம்பவம் காரணமாக திருச்சி கோர்ட்டு வளாகத்தில் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
    • வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சித் தொண்டர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.

    இதற்காக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர். வாக்குச்சாவடி முகவர்கள்- குழுவினர் என லட்சக்கணக்கானோர் கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.

    'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு . டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

    இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.

    மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு 4 பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

    தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.

    வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

    கட்சித் தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

    தொகுதி பங்கீட்டுக் குழு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×