search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணலி புதுநகர் அருகே பஸ் ஏறுவதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்
    X

    மணலி புதுநகர் அருகே பஸ் ஏறுவதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்

    • சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
    • சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் கிராம பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்வதற்காக மாநகர பஸ் வசதியில்லை.

    இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என அனைவருமே விச்சூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மணலி புதுநகருக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தான் மாநகர பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது.

    அதேபோல், சோழவரம் செல்ல வேண்டுமென்றால் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் ஒத்திகைக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    நாங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×