search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.7,108 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
    X

    ரூ.7,108 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

    • இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
    • ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அந்த முடிவுகள் பற்றி தலைமைச் செயலகத்தில்பத்திரிகையாளர்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் புதிய தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை செய்வதற்காக அரசுக்கு முன்மொழிவுகளை அளித்தனர்.

    அதற்கான அமைப்பு முறைகளான தொகுப்பு சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. செயின்ட் கொபைன், ஹான்பி டெவலப்மென்ட், ஹைக்வா டெக்னாலஜிஸ், மைலான் லேபரட்ரீஸ், ஏ.கே.டி.பி.எல்., செயன்யுபா, சுந்தரம் பாசினர்ஸ், இன்டர்நேசனல் ஏரோஸ்பேஸ் ஆகிய 8 நிறுவனங்கள் தொகுப்பு சலுகைகளை அமைப்பு முறையில் பெறுவதற்கும், தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்கும் கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீடுகளில் 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு தொகுப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு ஆகிய துறைகளில் முதலீடுகள் செய்ய உள்ளனர். ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 4 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. 2007-ம் ஆண்டு இருந்த சிறுதுறைமுகங்கள் கொள்கை தற்போது மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையாக மாற்றப்பட்டுள்ளது. கடல் சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்க பெரிய அளவில் போட்டிகள், மாநிலங்களுக்கு இடையே உள்ளன. தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுக மேம்பாடு, வணிக ரீதியான அனுமதிகள் உள்ளடக்கிய கொள்கை அது. பெரிய கப்பல்களை நிறுத்த பெரிய முதலீடு அவசியம். கடல் புறம்போக்கு பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு விடவும் இந்த கொள்கை வழிவகுக்கும். நீர் சவால் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், கடல்சார் வளர்ச்சி ஆகியவை அதில் உள்ளடக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×