search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவில் தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு: அறங்காவலர் தலைவரிடம் பத்திரம் வழங்கிய முதலமைச்சர்
    X

    திருச்செந்தூர் கோவில் தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு: அறங்காவலர் தலைவரிடம் பத்திரம் வழங்கிய முதலமைச்சர்

    • தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும்.
    • காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, காமாட்சியம்மன் கோவிலுக்கு ரூ.39.29 லட்சமும் வட்டித்தொகையாக கிடைக்கப் பெறும் வகையில் தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களில் கோவிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, இதர இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர். அருள் முருகனிடம் வழங்கினார்.

    தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 168 கிலோ 68 கிராம் 889 மில்லி கிராம் எடையுள்ள சுத்த தங்கக்கட்டிகள் கோவில் நிர்வாகத்தின் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.99,77,64,472/-ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.2.25 கோடி இக்கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    இதேபோல விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.24.09 லட்சமும், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் கோவிலுக்கு ரூ.1.04 கோடியும், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ரூ.39.13 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, காமாட்சியம்மன் கோவிலுக்கு ரூ.39.29 லட்சமும் வட்டித்தொகையாக கிடைக்கப் பெறும் வகையில் அதே மும்பை வங்கியில் தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது..

    இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.24 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×