search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பாதியில் நிற்கும் சுரங்கப்பாதை திட்டம்
    X

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பாதியில் நிற்கும் சுரங்கப்பாதை திட்டம்

    • ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
    • பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம், சுரங்கநடைபாதை வசதிகள் இல்லை. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடைமேடைகளுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்மோதி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிபெருக்கி மற்றும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் பணிக்கு நிலம் எடுப்புக்கான தடை நீக்கப்பட்டது.


    இந்த பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் அங்கு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. கட்டி முடிக்காமல் பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து. இதுவரை ரூ.38 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியை முழுமையாக செய்வதற்கும், நில எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரைகள் வழங்கிய நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

    எனவே கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போதும், இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது"வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சுரங்கப்பாதை சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×