search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் மீண்டும் ஏறுமுகம்: வரத்து குறைந்ததால் தக்காளி விலை ரூ.50-ஐ தொட்டது
    X

    மதுரையில் மீண்டும் ஏறுமுகம்: வரத்து குறைந்ததால் தக்காளி விலை ரூ.50-ஐ தொட்டது

    • மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம்.
    • மழை காரணமாக செடிகளில் அழுகல் ஏற்பட்டதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் 2 மாத இடைவெளிக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் 50 ரூபாயை தொட்டுள்ளது. வரத்து குறைந்ததால் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய அங்கமாகும். தக்காளி சேர்த்தால்தான் உணவில் ருசி கூடும் என்பதால் தக்காளியை எந்த காலத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவது உண்டு.

    வரத்து அதிகமான காலங்களில் தக்காளியை குப்பைகளில் கொட்டுவதும், வரத்து குறைந்த நேரத்தில் 100 ரூபாயை தாண்டி விற்றாலும் தக்காளிக்கு போட்டி போடுவதுதான் மக்களின் இயல்பு நிலையாக இருந்து வருகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிலோ 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம். மழை காரணமாக செடிகளில் அழுகல் ஏற்பட்டதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று விலை ஏற்றம் காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனையில் தக்காளி விலை ரூ. 50-ஐ தாண்டியுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது மழை காரணமாக தக்காளி மகசூல் குறைந்துள்ளது. இதனால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தக்காளியின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலையும் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் மார்க்கெட்டுகளில் தக்காளி விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    Next Story
    ×