search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 4 நாட்களில் 25 அடி உயர்வு
    X

    92 அடியை எட்டிய பாபநாசம் அணை.

    நெல்லை, தென்காசியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 4 நாட்களில் 25 அடி உயர்வு

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது.
    • பாபநாசம் அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை பெய்து வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்து 91.60 அடியாக உள்ளது. அணைக்கு 6,921.99 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக தொடர்மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 25 அடி உயர்ந்துள்ளது.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. தற்போது நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இதேபோல் முழு கொள்ளளவு 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 11 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டி உள்ளது. கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 78.80 அடியில் இருந்து சுமார் 50 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டரும், பாபநாசதத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க இன்றும் தடை நீடிக்கிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு 3 அடி நீரே தேவை. இன்று காலை நிலவரப்படி அணை பகுதியில் 50 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அடவிநயினார் அணை பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 112 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 48.89 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை பகுதியில் 62 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×