search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை- புறநகர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை

    • ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது.
    • சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    மழை ஓய்ந்த பிறகும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து 2 நாட்கள் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் அதன் பிறகு வெள்ளம் வடியத் தொடங்கியது. வெள்ளம் வடியாத தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்து 1 வாரம் ஆகியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் வடியாமலேயே காணப்படுகிறது. இந்த தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் வெள்ளம் வடியவில்லை.

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் யமுனா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 15 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரமாக 10 அடிக்கு மேல் தண்ணீர் நின்று கொண்டு இருந்த நிலையில் தற்போது இடுப்பளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இதனை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்களை ஏற்றி செல்ல பழவேற்காட்டில் இருந்து மோட்டார் படகு வரவழைக்கப்பட்டது. இந்த படகில் 3 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்த நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்திற்காக மாவட்ட நிர்வாகம் இத்தகைய மோட்டார் படகை ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஏறி இன்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற ஏற்கனவே டிராக்டர்களுடன் 7 மோட்டார்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 160 குதிரை திறன் கொண்ட புதிய மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு மெட்ரோ சிட்டி 6-வது தெருவில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த தண்ணீரும் இன்னும் வடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை திருநின்றவூரில் 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. திருநின்றவூர் பெரியார்நகர், திருவள்ளுவர் தெரு, பாரதியார் தெரு, முத்தமிழ் தெரு, சுதேசி நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கட நகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அந்த பகுதியில் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு போலீசாரும், தன்னார்வலர்களும் படகில் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறார்கள். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பல மாணவ-மாணவிகள் படகிலேயே பள்ளிக்கு சென்றனர். பெரியார் நகரில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக கொசவன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி 50 மீட்டர் தூரத்துக்கு தற்காலிக கால்வாய் அமைத்து தன்ணீரை கூவம் ஆற்றில் விழச்செய்து வெளியேற்றுகிறார்கள். இதற்காக திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையிலும் குறுக்கே வெட்டப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.

    கொடுங்கையூர் சேலவாயல் தென்றல் நகர் 2-வது தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கிய மழை வெள்ளம் இன்னமும் வடியவில்லை. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொது மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. சேலவாயல் ராகவேந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியிலும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. அங்கு டிராக்டர் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள 2 தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இன்னும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. இந்த பகுதி பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளதால் இங்கு இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த பகுதியில் மேலும் 5 தெருக்களில் லேசான அளவில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. இங்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

    மேலும் போரூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம் மெயின்ரோடு, பரணிபுத்தூர் அருகேயுள்ள மாங்காடு மெயின்ரோடு, அய்யப்பன்தாங்கல், பெரிய கொளத்துவாஞ்சேரி, வளசரவாக்கம் விஜயாநகரில் உள்ள சில பகுதிகள், போரூர் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து இந்த பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×