search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் ஆர்.என்.ரவி வரம்பு மீறி செயல்படுகிறார்- வைகோ கடும் கண்டனம்
    X

    கவர்னர் ஆர்.என்.ரவி வரம்பு மீறி செயல்படுகிறார்- வைகோ கடும் கண்டனம்

    • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப் போல இருக்கிறது.
    • தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி கவனத்திற்கு வராமலேயே பல்கலைக் கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

    தமிழக உயர்கல்வித் துறை மூலம் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் இது பற்றி விளக்கம் கேட்டபோது,

    பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழிகாட்டுதலுடன் இவ்விழா நடைபெறுவதாகவும், விழாவில் பங்கேற்போர் குறித்து ஆளுநரே முடிவெடுத்து பட்டமளிப்பு விழா தேதியையும் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

    ஆளுநர் மாளிகை அலுவலர்களுடன் தமிழக அரசின் அதிகாரிகள் தொடர்புகொண்டு கேட்ட போது, "நாங்கள் அப்படி தான் அழைப்போம். என்ன முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்" என்று மரியாதையின்றி பேசுகின்றனர்.

    இவ்வாறு ஆளுநர் வரம்பை மீறி பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் தலையிடுவதால், அதைக் கண்டிக்கும் விதமாக "பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்" என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்து இருக்கிறார்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப் போல இருக்கிறது.

    ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிப்பதையும், அதிகார வரம்பை மீறி செயல் படுவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியப் படுத்துவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்துத் தந்துள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும்.

    தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×