search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தம்பதியை கொன்று கொள்ளையடித்தேன்- கைதான தீயணைப்பு வீரர் வாக்குமூலம்
    X

    தம்பதியை கொன்று கொள்ளையடித்தேன்- கைதான தீயணைப்பு வீரர் வாக்குமூலம்

    • நான் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் எனக்கு கடன் தொல்லை ஏற்பட்டது.
    • பரமத்திவேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70).

    இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (என்கிற) சின்னபிள்ளை (65).

    இவர்களுக்கு கீதா, கோமதி, யமுனா என்ற 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி நள்ளிரவு சண்முகத்தின் வீட்டிற்கு முன்பு இருந்த மரத்தில் ஏறிய மர்மநபர் வீட்டின் மாடியில் குதித்து அங்கிருந்த படிகட்டு வழியாக வீட்டினுள் நுழைந்தார்.

    அப்போது அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாள் மற்றும் அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி கடப்பாரையால் தாக்கினார். பின்னர் அந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வெளிக்கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

    அப்போது வீட்டிற்குள் தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இறந்து கிடந்த நல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் இரட்டை கொலை, கொள்ளை வழக்கு பதிவு செய்தனர்.

    இதனிடையே நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் 2 ஏ.டி.எஸ்.பி மற்றும் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின்பேரில் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் ஜனார்த்தனன் (32) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வரும் ஜனார்த்தனன் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினரை தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் எனக்கு கடன் தொல்லை ஏற்பட்டது. இதனால் எனது பண தேவைக்காக குச்சிக்காட்டு பகுதியில் தனியாக வசிக்கும் வயதான தம்பதி வீட்டில் திருட திட்டமிட்டேன்.

    அதன்படி அக்டோபர் 11-ந் தேதி நள்ளிரவில் சண்முகத்தின் வீட்டில் திருட முயன்றபோது நல்லம்மாள் திடீரென விழித்து என்னை பார்த்துவிட்டார். நல்லம்மாளுக்கு ஏற்கனவே என்னை நன்றாக அடையாளம் தெரியும்.

    இதனால் என்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்திலேயே அவரை அங்கிருந்த கடப்பாரையால் தாக்கினேன். அவரது சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது கணவர் சண்முகத்தையும் கடப்பாரையால் தாக்கிவிட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை திருடினேன்.

    பின்னர் கத்தி மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கடப்பாரை, சுத்தி ஆகியவற்றை அருகில் இருந்த கிணற்றில் தூக்கி போட்டுவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து நேற்று பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனார்த்தனை ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக கொலை நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசாரிடம் கொலை நடந்த விதம் குறித்து ஜனார்த்தனன் நடித்து காண்பித்தார். கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 ஆயுதங்களையும் அருகில் இருந்த கிணற்றில் போலீசார் தேடி வருகின்றனர்.

    வயதான தம்பதி இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரரே ஈடுபட்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×