search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை

    • சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
    • புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.

    பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.


    பொன்னேரி அடுத்த சின்ன காவனம், பெரிய காவனம், உப்பளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர், மற்றும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு அவர்கள் மின்சாரம் வழங்க கோரி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பங்குகளில் பெட்ரோல் டீசல் இல்லாததால் பொன்னேரியில் இருந்து பாட்டில்களில் வாங்கப்படும் பெட்ரோலை சிலர் ஒரு லிட்டர் ரூ.140 -க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு மற்றும் அனுப்பப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 34 மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதானது. இதனால் 5 நாட்களாக கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பவில்லை. பழதடைந்த மின்மோட்டர்களை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சன்முகநாதன்,மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாகப் பொறியாளர் அமலதீபன், உதவிப் பொறியாளர்கள் சம்பத், தமிழ்மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் 784 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்திர் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×