search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவாரிக்கு ஒத்துக்கொண்டு பிறகு மறுத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம்
    X

    சவாரிக்கு ஒத்துக்கொண்டு பிறகு மறுத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம்

    • பொதமக்களுக்கும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கும் வாய் தகராறு ஏற்படும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பவை வாடகை கார் மற்றும் ஆட்டோக்களாகும்.

    ஆனால் சில நேரங்களில் ஆட்டோ மற்றும் கார்களை பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    நீண்ட தூர பயணம் மற்றும் திரும்ப வரும் போது வாடகைக்கு யாரும் வர மாட்டார்கள் என்பது போன்ற காரணங்களை கூறி ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் முதலில் வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்க வேண்டியது உள்ளது.

    அதன் பின்னர் வேறு வாகனங்களை பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்குள் மன அழுத்தத்தை சந்திக்கும் பொதமக்களுக்கு நேரமும் விரயம் ஆகிறது. இதனால் பொதமக்களுக்கும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கும் வாய் தகராறு ஏற்படும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் முதலில் சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்ட பிரிவான 178(3)-ன் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இனி சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர முடியாது என்று கூறினால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக 90031 30103 மற்றும் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக ஆவடியை சேர்ந்த தினேஷ் என்பவர் கூறும்போது, பெரும்பாலும் கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சவாரி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நகரப் பகுதிகளில் இருந்து வருவது இல்லை.

    போலீசாரின் நடவடிக்கையால் வருவதாக கூறி விட்டு பின்னர் மற்றும் ஆட்டோ டிரைவர்களும், கார் டிரைவர்களும் சவாரிக்கு வருவதை இனி தவிர்ப்பதற்கு யோசிப்பார்கள். இது வரவேற்க கூடிய விஷயம்தான் என்று தெரிவித்தார். 15 கி.மீ. மேல் இருந்தால் அவ்வளவு தூரமா? என்னால் வர முடியாது என்று கூறும் டிரைவர்களும் உள்ளனர். போலீசாரின் நடவடிக்கையால் இந்த நிலையும் மாறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×