search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
    X

    சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

    • ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    நாளை மறுநாள் (12-ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொறுத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதற்கு அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக இருந்தது. அதே நேரம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பஸ் நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர்.

    இந்த பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென் மாவட்டம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.

    ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    பஸ் இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 2,734 பஸ்களில் 1 லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    அதே நேரம், சென்னையில் இருந்து பயணிக்க 19,858 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டன.

    இந்த பஸ்களில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

    அரசு போக்குவரத்துக் கழக பஸ் இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1800 599 1500 என்ற கட்டணமில்லா உதவி எண் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், 149 எனும் புதிய உதவி எண் மூலமாக மக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    இதே போல சென்னையில் இருந்து 1,320 ஆம்னி பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 51 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 1,680 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் 67 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் நேற்று ஒரே நாளில் சுமார் 3.50 லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×