search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 5 நாட்களில் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
    X

    சென்னையில் 5 நாட்களில் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.

    செவ்வாய்கிழமை முதல் நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

    இதுவரை 95 சதவீத இடங்களில் மழை தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்னும் 5 சதவீத புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. அந்த தெருக்களில் தண்ணீரை வெளியேற்ற இன்னும் ஒரு வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வெள்ளம் அகற்றப்பட்ட பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் டன் கணக்கில் குப்பைகள் இருப்பதால் அவற்றோடு போராடும் நிலைமைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.

    கடந்த 6, 7-ந்தேதிகளில் சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. கடந்த 3 நாட்களில் மேலும் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. லாரி, லாரியாக குப்பைகள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கடந்த 5 நாட்களில் சுமார் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. இன்னமும் நூற்றுக்கணக்கான தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சென்னையில் இன்னும் 10 டன் குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் குப்பைகளை கொட்டுவதுதான் கடும் சவாலாக மாறி வருகிறது. பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் வெற்றிடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதற்கு சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை மற்றும் தெருக்களில் விழுந்த 1,351 மரங்களில் 1,255 மரங்கள் அகற்றப்பட்டன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 726 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 51,158பேர் பரிசோதனை மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×