search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்- தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
    X

    கருணாநிதிக்கு 'பேனா' நினைவு சின்னம்- தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

    • மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.
    • மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளிபடங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    இப்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த அறிக்கையை விரிவாக 4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

    அனைத்து அனுமதிகளையும் பெற்று அடுத்த கட்ட கட்டுமான பணியை தொடங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

    இதன் மூலம் ரூ.81 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைப்பது உறுதியாகி உள்ளது.

    Next Story
    ×