search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியார்-மணியம்மையார் பற்றிய தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம்
    X

    பெரியார்-மணியம்மையார் பற்றிய தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

    • தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.
    • பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    சென்னை:

    வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாடு கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசும்போது, தந்தை பெரியார், மணியம்மையார் பற்றி பேசிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில், தி.மு.க.வுக்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகளை பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது, தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.

    வேலூருக்கு பிரசாரத்துக்கு வந்த தந்தை பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணிகளை பார்த்த பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர்காலத்தில் கட்சியை காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். இது பொருந்தா திருமணம் என்று திராவிட கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.

    இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், 'பெரியார் மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்' என்று சொல்லவேண்டிய இடத்தில், 'பெரியார் மணியம்மையாரை கூட்டிக்கொண்டு போய்விட்டார்' என்று பேசிவிட்டேன். 'அழைத்துக்கொண்டு போனார்' என்பதற்கும், 'கூட்டிக்கொண்டு போனார்' என்பதற்கும் பலத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

    என்னுடைய இந்த பேச்சு, அண்ணன் வீரமணிக்கும், பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×