search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு: ஏற்காட்டில் சாரல் மழையால் களை கட்டிய குளு குளு சீசன்
    X

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு: ஏற்காட்டில் சாரல் மழையால் களை கட்டிய குளு குளு சீசன்

    • மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.
    • கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.

    சேலம்:

    ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, பிரசித்தி பெற்ற கொல்லிமலை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குடும்பம், குடும்பமாக வருகின்றனர்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக சாரல் மழை விட்டு விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு குளிர்ச்சியான சீசனாக மாறியுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களை பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.

    அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்துள்ளது. ஏற்காடு ஏரியில் உள்ள படகு துறையில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏரியில் பகல் முழுவதும் படகுகள் தொடர்ச்சியாக உலா வந்தன.


    சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சிறு கடைகள், நொறுக்குத் தீனி கடைகள், பழச்சாறு கடைகள், பரிசுப் பொருட்களின் கடைகள் என ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை நிரம்பி வழிந்தன.

    சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்ததால் ஏற்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. எனினும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கோடை காலம் முடியும் வரை ஏற்காடு திருவிழாக் கோலத்தில் இருக்கும் என்பதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொங்கி உள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


    இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களகாக வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×