search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிட்டது வருமான வரித்துறை
    X

    சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிட்டது வருமான வரித்துறை

    • ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
    • வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    ரூ.1 கோடிக்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்ற வருமான வரித்துறை சுற்றறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வருமானவரித் துறை அளித்த விளக்கத்தை ஏற்று, சசிகலாவுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

    வழக்கு விவரம்:

    1996-97 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா செல்வவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் 2001ம் ஆண்டு பதில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட ஆண்டில், சசிகலாவிடம் ரூ.4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதால் அவற்றுக்கு ரூ.10,13,271 செல்வ வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்ற வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்கு உட்பட்டு மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்றும், ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து 2018ம் ஆண்டு வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.1 கோடிக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்று நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், அதன் அடிப்படையில் சசிகலா மீதான செல்வ வரி வழக்கை கைவிடுவதாகவும், வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×