search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    முக ஸ்டாலின்

    உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    • உப்பளத் தொழில் ஒரு பருவகால தொழிலாகும்.
    • உப்பளங்கள் கடற்கரை மாவட்டங்களில் அமைந்துள்ளதால் உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உப்பளத் தொழில் ஒரு பருவகால தொழிலாகும். உப்பளத் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் 9 மாதங்கள் மட்டுமே பணி புரிய வாய்ப்பு கிடைக்கும். உப்பளங்கள் கடற்கரை மாவட்டங்களில் அமைந்து உள்ளதால் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் காலத்தில் போதிய மாற்றுப் பணிகள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் இவர்கள் மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    2021-22ம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பின்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    இதன் மூலம் உப்பளத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

    தமிழ்நாடு உப்பு நிறுவனம், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் பொருட்டு, அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு மற்றும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், மதிய உணவு திட்டத்திற்கும் விற்பனை செய்து வருகின்றது.

    2021-22ம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு உப்புக் கழகம் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்தி கரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளி சந்தையில் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் ராசாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×