search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கீழ்ப்பாக்கத்தில் தலையில் கல்லைபோட்டு கொலை: 7 மாதங்கள் காத்திருந்து கார் டிரைவரை பழி தீர்த்த ரவுடி
    X

    கீழ்ப்பாக்கத்தில் தலையில் கல்லைபோட்டு கொலை: 7 மாதங்கள் காத்திருந்து கார் டிரைவரை பழி தீர்த்த ரவுடி

    • துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன். 26 வயதான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    அ.தி.மு.க. பிரமுகரான இவரது தந்தை ரவி கடந்த 2015-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாயும் இறந்துவிட்டார். இதனால் தனது சகோதரி மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கருணாகரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி யோனாவின் மீது கல்லை தூக்கி போட்டு தாக்கி தாக்குதல் நடத்தி உள்ளார். அவரது நண்பர்கள் 5 பேரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் கருணாகரன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கருணாகரன் சிறையில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியில் வந்தார். இந்த நிலையில் நேற்று மர்ம கும்பல் அவரை வழிமறித்து குட்டியப்பன் தெரு பகுதியில் வைத்து தாக்கி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.

    இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பழிக்கு பழியாக ரவுடி யோனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருணாகரனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. யோனா சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், தன் மீது கல்லை தூக்கி போட்டு காலில் முறிவு ஏற்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் 7 மாதங்கள் காத்திருந்து கருணாகரனை அவர் கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனைவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கருணாகரன் கொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள்ளேயே இருக்கும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப் பழியாக கொலை சம்பவம் அரங்கேற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள்.

    சிறையில் இருந்து வெளியில் வந்ததும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள். இந்த வழக்கில் அதுபோன்று கொலை நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே கண்டறிந்து இருந்திருந்தால் கருணாகரன் கொலையை தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இனி வரும் காலங்களில் அதுபோன்ற கண்காணிப்பை கண்டிப்பாக தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×