search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்ற காட்சி
    X
    கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்ற காட்சி

    கொடைக்கானலில் கடும் பனிமூட்டம்- முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்

    பெரும்பாலான விடுதிகளில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் நிறைந்து காணப்படுவதால் பழனி மற்றும் வத்தலக்குண்டுவில் தங்கி காலையில் கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வாகனங்கள் வருகின்றன.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் அசானி புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் தொடர்மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளி தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.

    10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் அந்த மாணவர்கள் படிப்பதற்கும், காலையில் பள்ளிகளுக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் கொடைக்கானலில் கோடைவிழா தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடைவிடாது மாலை நேரத்தில் பெய்யும் மழையால் அவர்கள் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கமுடியாமல் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    பெரும்பாலான விடுதிகளில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் நிறைந்து காணப்படுவதால் பழனி மற்றும் வத்தலக்குண்டுவில் தங்கி காலையில் கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. மாலையில் திரும்பி செல்லும்போது கடும் பனிமூட்டம் காரணமாக மலைச்சாலைகளில் மெதுவாக சென்று வருகின்றனர். நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்த நிலையில் இன்று காலையும் மழை பெய்ததால் நகர் முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவியது. அக்னிநட்சத்திர சீசன் என்பதையே மறக்க செய்யும் அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

    இதனால் எதிரில் வருபவர்கள் கூட தெரியாத சூழல் உள்ளது. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் கொடைக்கானலில் நிலவும் இந்த குளுகுளு சீதோஷ்ணம் வெளியூர் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 செ.மீ மழை பதிவானது. கொடைக்கானல் 5, பழனி 18, சத்திரபட்டி 10.2, போட்கிளப் 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.



    Next Story
    ×