search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலர்கள்
    X
    மலர்கள்

    ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்- கண்களுக்கு விருந்தளிக்கும் ரோஜா மலர்கள்

    ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடக்க உள்ள திடல், கண்ணாடி மாளிகை ஆகிய இடங்களை சீரமைக்கும் பணிகளில் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாகும். அங்கு ஏப்ரல், மே மாத இறுதியில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

    நடப்பாண்டு தொற்று குறைந்து வரும் நிலையில் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் தோட்டக்கலை துறையினர் 2 மாதங்களுக்கு முன்பு அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் 40 வகை மலர்களால் 2 லட்சம் செடிகளின் விதைகளை நடும் பணியை தொடங்கினர்.

    அதில் பால்சம், ஜினியா, கால்வியா, கிரைசாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா போன்றவை அடங்கும். ஏற்காடு ரோஜா என அழைக்கப்படும் டேலியா செடிகள் 4 ஆயிரம், கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டிருந்தன. தற்போது அங்கு பதியம் செய்யப்பட்ட விதைகள் செடியாகி பூத்துக் குலுங்குகின்றன.

    அண்ணா பூங்கா நிர்வாகத்தினர் அந்த தொட்டிகளை பூங்காவின் பல்வேறு இடங்களில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர். தற்போது ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலா பயணியர் அந்த பூக்களை ரசித்து செல்கின்றனர். அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடக்க உள்ள திடல், கண்ணாடி மாளிகை ஆகிய இடங்களை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குவதால் மாவட்ட நிர்வாகம், மலர் கண்காட்சிக்கான நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×