search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது- தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

    தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது.
    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10-க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

    மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ29-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக வேலை ஆட்களுக்கு கொடுக்கும் கூலிக்கு கூட விவசாயிகளுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மிகுந்த மன வேதனை அடைந்த விவசாயிகள் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகளை உரிய முறையில் பராமரிக்கவில்லை.

    மேலும் பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதையே நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று 44 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இன்று 56 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×