search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கியூஆர் கோடு
    X
    கியூஆர் கோடு

    சென்னையில் ஆன்லைன் வழியாக வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் கியூஆர் கோடு மூலம் மோசடி

    சென்னை நகரில் ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்கள் கியூஆர் கோடு மோசடி லிங்க் (இணைப்பு) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    சென்னை:

    வீட்டு உரிமையாளர்கள் டூலெட் போர்டு மற்றும் தரகர்கள் மூலம் வீடுகளை வாடகைக்கு விடுகிறார்கள். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஆன்லைன் மூலமாகவும், மொபைல் அப்ளிகே‌ஷன் மூலமாகவும் வாடகைக்கு வீடு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

    இணையதளம் மூலம் வாடகைக்கு வீடு விடுபவர்கள் புதிய வகையான மோசடிக்கு இலக்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. கியூஆர் கோடை பயன்படுத்தி இந்த மோசடி நடக்கிறது. மோசடி செய்பவர்கள் தங்களை ராணுவ அதிகாரிகளாக கூறிக்கொண்டு வீடுகளை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

    இதுபோன்ற சைபர் கிரைம்கள் மும்பை, புனே, மங்களூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. தற்போது சென்னைக்குள் இது மாதிரியான மோசடிகள் நுழைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சென்னை நகரில் ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்கள் கியூஆர் கோடு மோசடி லிங்க் (இணைப்பு) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சென்னையை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் இந்த வகையான மோசடிக்கு கிட்டத்தட்ட ஆளாகி விட்டார். பிப்ரவரி கடைசி வாரத்தில் அவர் பல இணையதளங்களில் தனது வீட்டை வாடகைக்கு பட்டியலிட்டார்.

    ஒருவர் அவரை தொடர்புகொண்டு அவசரமாக வீடு வேண்டும் என்று வலுக்கட்டாயமாக பேரம் பேசாமல் ஒப்புக்கொள்ள வைத்தார். அந்த நபர் ஒரு அடையாள அட்டையின் படத்தை அனுப்பி அந்த பெண்ணின் வங்கி விவரங்களை கேட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவருக்கு பதில் அளிப்பதை நிறுத்தினார். பின்னர் அந்த நபர் லிங்க் மற்றும் கியூஆர் குறியீடுகளை அனுப்பினார். கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுமாறு அல்லது பணத்தை பெற இணைப்பை கிளிக் செய்யும்படி வற்புறுத்தினார்.

    இதையடுத்து அந்த பெண் தனது போனில் இருந்து அந்த நபரின் எண்ணை பிளாக் செய்து தனது வீட்டின் பட்டியலையும் நீக்கினார்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ராணுவம் அல்லது மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி என்று கூறி ஏமாற்றும் நபர்கள் இது மாதிரியான மோசடியில் ஈடுபடுகிறார்கள். வயதானவர்களை குறிவைத்து ஏமாற்றுகிறார்கள்’ என்றார்.
    Next Story
    ×