search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுத்தை கடித்து குதறியதில் காயமடைந்த விவசாயி - பனியன் நிறுவனம் முன்பு திரண்ட பொதுமக்கள்
    X
    சிறுத்தை கடித்து குதறியதில் காயமடைந்த விவசாயி - பனியன் நிறுவனம் முன்பு திரண்ட பொதுமக்கள்

    திருப்பூரில் 7 பேரை கடித்து குதறிய சிறுத்தை சிக்கியது

    திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த 24-ந்தேதி விவசாயிகள், வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர் உட்பட 5 பேரை தாக்கிய சிறுத்தை வனத்துறையினர் விரித்த வலையில் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர், பெருமாநல்லூர் அருகே மேற்குத்தோட்டம் பகுதியில் சிறுத்தை சாலையை கடந்த தாக கூறப்படும் இடங்களில் சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் என ஏதாவது உள்ளதா? என தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பொங்குபாளையம் பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காலடி தடங்களும் எச்சமும் தப்பியோடிய சிறுத்தையுடையது தான் என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இதனையடுத்து பொங்கு பாளையம், கிருஷ்ணா நகர், எஸ்.பி.கே நகர், கோனக்காடு, எட்டம்ம பெரிச்சங்காடு, தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலக்கடலை மற்றும் மசால் புல் பயிரிடப்பட்டுள்ள வயல் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய 20 சென்சார் வகை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நாய் திடீரென மாயமானது. அதனை தேடியபோது அங்குள்ள கிணற்றின் அருகில் நாய் இறந்து கிடந்தது. நாயின் பாதி உடல் மட்டும் கிடந்ததால் தப்பித்த சிறுத்தை தான் அந்த நாயை அடித்து தின்று விட்டு சென்றது தெரியவந்தது.

    மீதமுள்ள நாய் இறைச்சியை சாப்பிட சிறுத்தை வரும் என்பதால் அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்களாகியும் வனத்துறையினர் பிடியில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருவது பாப்பாங்குளம்,பொங்கு பாளையம் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் தோட்டம், வயல்களுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் பின்பகுதியில் அந்நிறுவனத்தினர் வாழை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். அதனை விவசாயி ராஜேந்திரன் (வயது 55) என்பவர் பராமரித்து வந்தார். இன்று காலை வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ராஜேந்திரன் மீது பாய்ந்து கடித்து குதறியது. ராஜேந்திரன் சத்தம் போடவே பனியன் நிறுவன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுத்தை கடித்து குதறியதில் ராஜேந்திரன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வாழை மரங்களுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தையை விரட்டுவதற்காக பனியன் நிறுவனத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் உள்ளே சென்றார். அப்போது அவர் மீதும் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறல் சத்தம் போட்டு அங்கிருந்து தப்பியோடினார். அவரை சிறுத்தை விரட்டி கொண்டே வந்ததால் அதனை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறியடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் பாப்பாங்குளம், பொங்குபாளையம் பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் அம்மாபாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை பணியாளர்கள் சிவக்குமார், தனபால், பிரவீன் ஆகியோர் உள்ளே சென்றனர். அப்போது பதுங்கியிருந்த சிறுத்தை 3 பேர் மீதும் பாய்ந்து தாக்க முயன்றது. இதில் 3 பேரும் லேசான காயத்துடன் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பினர். இதனிடையே பனியன் நிறுவனத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென அங்கிருந்து வெளியேறி பனியன் நிறுவன பின்பக்கமுள்ள வயல் பகுதிக்குள் தப்பியோடியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

    வனத்துறை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் சிறுத்தை தப்பியது குறித்தும் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்தனர். வீடுகளின் கதவுகளை திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே இருந்தனர். சிறுத்தை பொதுமக்களை தாக்கும் பட்சத்தில் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வகையில் 5 ஆம்புலன்ஸ்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    சம்பவ இடத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பிடிபட்ட சிறுத்தை.
    பிடிபட்ட சிறுத்தை.

    இந்தநிலையில் வயல் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை இன்று மதியம் 1 மணியளவில் மீண்டும் பனியன் குடோனிற்குள்ளேயே வந்து புகுந்தது. அங்கிருந்து தப்பி சென்றால் சிறுத்தையை பிடிப்பது கடினம் என்பதால் அதனை லாவகமாக  பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து அதன் மீது மயக்க ஊசி செலுத்தினர். இதில் சிறுத்தை மயங்கியதையடுத்து அதனை கூண்டுக்குள் அடைத்து அங்கிருந்து கொண்டு சென்றனர். 
    Next Story
    ×