search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் நிலையத்தில் போலீசார் உதவியுடன் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள்
    X
    ரெயில் நிலையத்தில் போலீசார் உதவியுடன் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள்

    கார் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று ரெயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளில் வாடகை கார்கள், ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊர டங்கு கடைபிடிக்கப்பட்டு இருந்தபோதிலும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன.

    ஊரடங்குக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலையில் சென்னையில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வழக்கம்போல ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன.

    இதுபோன்று இயக்கப்படும் ரெயில்களில் பயணிக்கும் பொதுமக்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ரெயில் நிலையங்களில் இறங்கிய பிறகு தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

    ஆட்டோ, வாடகை கார்கள் முறையாக இயக்கப் படாதது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.

    இது தொடர்பாக பொது மக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தனர். ஊரடங்கு நாளில் ரெயில்களை இயக்கி விட்டு வீடு திரும்புவதற்கு வாடகை கார், ஆட்டோக்களை முறையாக இயக்காமல் இருந்தால் நாங்கள் என்ன செய்வது? என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முழு ஊரடங்கு நாளில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு வசதியாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்களை முறையாக இயக்குவதற்கு போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளில் வாடகை கார்கள், ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆட்டோ மற்றும் கார்களில் கட்டணங்கள் முறையாக வசூலிக்கப்படுகிறதா? கூடுதல் கட்டணத்தை கேட்கிறார்களா? என்பது பற்றி இன்று காலையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணித்தனர்.

    இது தொடர்பாக வாடகை கார்கள், ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா? என்பதை அறிந்து பயணிகளை அவர்களின் அருகிலேயே நின்று வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இதன்மூலம் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அன்று ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் அவதிப்பட்ட பயணிகள் இன்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிரமமின்றி தங்களது வீடுகளை சென்றடைந்தனர்.

    Next Story
    ×