search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    தூத்துக்குடியில் முகக்கவசம் இன்றி சென்றவர்களுக்கு இன்று முதல் அபராதம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் இன்று மூடப்பட்டது.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் அலையின்போது உச்சத்தில் இருந்த தொற்று மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மட்டுமே தற்போது ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தாலும் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

    மாவட்டத்தில் மாநகர பகுதி மற்றும் கோவில்பட்டி பகுதியில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் 50 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரேநாளில் இந்த பாதிப்பு இருமடங்குக்கும் மேல் உயர்ந்து 123 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கசவம் அணிந்து செல்ல வேண்டும் என கலெக்டர் செந்தில் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

    கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் மாவட்டத்தில் முகக்சவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி மாநகர பகுதியில் முகக்கசவம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று ஒமைக்ரான் பாதிப்பு குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் இன்று மூடப்பட்டது.

    வழக்கமாக ராஜாஜி பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்காக்களில் தினமும் ஏராளமானவர்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவார்கள். இன்றும் அதிகாலை நடைபயிற்சிக்காக சென்றனர்.

    ஆனால் பூங்கா மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் தருவை மைதானமும் இன்று மூடப்பட்டிருந்தது.

    மாநகரில் உள்ள கடைகளில் சுகாதார துறையினரும், போலீசாரும் ரோந்து சென்று சமூக இடைவெளி, முகக்கசவம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×