search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    பெட்ரோல்-டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன்?- அண்ணாமலை

    மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட்வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும்பங்கான வாட்வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

    இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ரூ.7-8 ரூபாயும் - டீசல் விலையை ரூ.9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

    இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் 7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் 12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் 2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

    ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

    இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச்சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

    மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச்சுமையை குறைக்க முன் வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×